பதிவு செய்த நாள்
23
ஏப்
2013
10:04
கூடலூர்: மங்கலதேவி கண்ணகி கோயிலில், சித்ரா பவுர்ணமி விழா, வரும் 25 ம் தேதி, நடக்கிறது. தமிழக கேரள எல்லைப்பகுதியில், வண்ணாத்திப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது கண்ணகி கோயில். சித்ரா பவுர்ணமி தினத்தன்று, இங்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, நாளை மறுநாள் விழா நடக்கிறது. இக்கோயில், அமைந்துள்ள இடம் யாருக்கு சொந்தம் என்பதில், தமிழக, கேரள மாநிலங்களிடையே, பிரச்னை இருந்து வந்த போதிலும், ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் விழாவில், இரு மாநில பக்தர்கள் அதிகளவில் கலந்து கொள்கின்றனர். கோயிலுக்கு, கேரள மாநிலம் குமுளி வழியாக 15 கி.மீ., தூரம் ஜீப் பாதையும், தமிழகத்தில் இருந்து பளியன்குடி வழியாக, 6.6 கி.மீ., நடைபாதையும் உள்ளது. மதுரை, தேனியில் இருந்து குமுளிக்கு அடிக்கடி பஸ் வசதியுள்ளது. குமுளியில் இருந்து, கோயிலுக்கு செல்வதற்காக ஜீப் வசதியுள்ளது. காலை 5:30 மணியில் இருந்து, மாலை 3:00 மணி வரை, மட்டும் இப்பாதையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும். தமிழகப்பகுதியான பளியன்குடியில் இருந்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து செல்லும் பாதை உள்ளது. கூடலூர் மற்றும் கம்பத்தில் இருந்து, பளியன்குடிக்கு பஸ் வசதியுள்ளது. பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகளில், குடிநீர் மற்றும் அவசர சிகிச்சைக்காக மருத்துவ பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.