திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவில் நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் சித்திரை பெருவிழா நடந்து வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் திலோத்தம்மாள், தீர்த்தவிடங்க தியாகராஜர் தேரில் எழுந்தருளினர்.நேற்று காலை ஏழு மணியளவில் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் முன்னாள் வர்த்தக சங்க தலைவர் சின்னப்பா, செயல் அலுவலர் நீதிமணி உட்பட நூற்றுக்கணக்கானோர், "தியாகேசா, ஓம் நமச்சிவாயா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகளில் தேர் வலம் வந்து மாலையில் நிலை வந்துடைந்தது.தேரோட்ட நிகழ்ச்சி லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் நடந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி., அப்பாசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் மற்றும் போலீஸார் செய்திருந்தனர்.