பதிவு செய்த நாள்
25
ஏப்
2013
10:04
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த அத்திகானூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பன், 70. இவரது வாரிசுகளும், பங்காளிகளும் சேர்த்து மொத்தம், 62 குடும்பங்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளி மாநிலங்களுக்கு சென்று துணி வியாபாரம் செய்து வருகின்றனர். பங்காளிகள் பெரும்பாலானோர் வெளி மாநிலங்களில் தங்கி வியாபாரம் செய்வதால், ஆண்டு தோறும் குலதெய்வம் திருவிழா கொண்டாட முடியவில்லை. இதையடுத்து, வெங்கடப்பன் தலைமையில் கூடிய பங்காளிகள், 40 ஆண்டுகளுக்கு பின், இந்தாண்டு குலதெய்வ கோவில் விழா கொண்டாட முடிவு செய்தனர்.விழா கடந்த, ஐந்து நாட்களுக்கு முன் துவங்கியது. முதல் நாளில் அனைவரும் போச்சம்பள்ளி அடுத்த வதனவாடியில் உள்ள குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். மறுநாள் பங்காளிகள் அனைவரும் திருப்பதிக்கு சென்று, கீழ் திருப்பதியில் உள்ள ஆழ்வார் தீர்த்தத்தில் குளித்து, பெருமாள் கோவிலில் வழிபட்டனர்.மூன்றாவது நாள் மேல் திருப்பதிக்கு சென்று, மொட்டை போட்டுக்கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். நான்காவது நாள் திருச்சானூர் சென்று அலமேலு மங்கம்மாவை வழிபட்டு, அத்திகானூர் திரும்பினர். ஐந்தாம் நாளான நேற்று, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை ஒரே இடத்தில் அமரவைத்து காது குத்தினர்.