பதிவு செய்த நாள்
25
ஏப்
2013
10:04
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில், பணியாளர்கள்- அர்ச்சகர்கள் இடையே நடந்த மோதல் தொடர்பாக, அறநிலையத்துறை அதிகாரி, விசாரணை நடத்தினார். இக்கோயிலுக்கு, கடந்த 21ம் தேதி மாலை, டிக்கெட் இல்லாமல், சுவாமி தரிசனம் செய்யவந்த பெண்ணை, வி.வி.ஐ.பி.,வழியில் அனுமதிக்காத பிரச்னையில், கோயில் பணியாளர்கள்- அர்ச்சகர்களிடையே, மோதல் ஏற்பட்டது. இதில், பணியாளர்,தேனி செந்தில்குமார், அர்ச்சகர்கள் சரவணன்,லட்சுமணன் ஆகியோர் காயமடைந்தனர். இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செந்தில்குமாரிடம், அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் ராஜா, நேற்று, விசாரணை நடத்தினார். பின்னர், திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்கள், பணியாளர்களிடம் விசாரித்தார். இந்த விசாரணை அறிக்கை, தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.