கோவை: ஜெயின் சமூகம் சார்பில் நடந்த 2,612வது மகாவீர் ஜெயந்தி விழாவில், மகாவீர் குறித்த பாடல்களை பாடியவாறு பெண்கள் ஊர்வலமாக சென்றனர். நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவையில் ஜெயின் சமூகம் சார்பில் கொண்டாடப்பட்ட 2,612வது மகாவீர் ஜெயந்தி விழாவில் மகாவீரரின் ரதம் ஊர்வலமாக சென்றது. ரங்கேகவுண்டர் வீதியிலுள்ள சுபாஸ்நாத் பீம் கோவிலில் துவங்கிய ரதம், நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று இறுதியில் வைசியாள் வீதியில் உள்ள விமல்நாத் கோவிலை அடைந்தது. ராஜஸ்தான் ஜெயின் மூர்த்தி பூஜத் சங்க தலைவர் மதன்லால் பாப்னா தலைமையில் நடந்த ஊர்வலத்தில், "அகிம்சையை கடை பிடிப்போம், வாழு; வாழவிடு, வாயில்லா ஜீவன்களை கொல்லாதே என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன; மகாவீர் பற்றிய பாடல்கள் பாடப்பட்டன. குழந்தைகள் தங்கள் தலையில் கும்பம் ஏந்தியும், சிறு ஜீவராசிகள் மீது பாதம் படாமலிருக்க மகளிர் தெருக்களை சுத்தம் செய்தவாறும் சென்றனர். இறுதியாக, விமல்நாத் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டும், பஜனை பாடல்கள் பாடியும் விழா நிறைவடைந்தது.