பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த போடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி "பூ மிதித்தனர். பொள்ளாச்சி அடுத்த போடிபாளையம் பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 8ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. 9ம் தேதி அம்மன் கொலு வைத்தும், சக்தி கும்பம் முத்தரிக்கப்பட்டும் தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. விழாவை ஒட்டி, பல்வேறு தலங்களில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் இரவு 60 அடி நீளமும், நான்கு அடி அகலமும் கொண்ட குண்டத்தில் "பூ வளர்க்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைவித்த பொருட்களை கொண்டு வந்து குழியிலிட்டு பூ வளர்த்தனர். இரவு 9.00 மணிக்கு சிங்க வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் முக்கியப்பகுதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை 7.00 மணிக்கு அக்னி கும்பம் கொண்டு வரப்பட்டது. முதலில் அருளாளிகள் பூப்பந்து உருட்டிவிட்டு, குண்டத்தில் இறங்கி பூ மிதித்தனர். தொடர்ந்து, விரதமிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் "பூ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன்பின், அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. மாலை 4.00 மணிக்கு அம்மனுக்கு மாவிளக்கு படைத்து பக்தர்கள் வழிபட்டனர். இன்று இரவு இரட்டை கிடா வெட்டி சக்தி கும்பம் கங்கையில் விடப்படுகிறது. நாளை (26ம் தேதி) காலை மகா அபிஷேக ஆராதனையுடனும், மஞ்சள் நீராட்டுதலுடனும் விழா நிறைவடைகிறது. குண்டத்தையொட்டி, போடிபாளையம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.