பதிவு செய்த நாள்
25
ஏப்
2013
11:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை ஒட்டி நடந்த, "கம்பம் ஸ்தாபனம் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஏப்., 16ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கம்பம் ஸ்தாபனம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், சிறப்பு பூஜைகள் நடந்தன. மாரியம்மன் உற்சவர், மூலவர், செல்வ முத்துக்குமரன், விநாயகர் சுவாமிகளுக்கு கங்கணம் கட்டும் பூஜை நடந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சுந்தரமூர்த்தி விநாயகர் கோவிலிலுள்ள தீர்த்தக்கிணற்றிலிருந்து சக்தி அழைத்து, திருக்கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பபட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து திருக்கம்பத்தை பக்தி முழக்கங்கள் முழங்க, கும்பங்கள் முன்செல்ல மேள, தாளத்துடன் பக்தர்கள் கோவிலுக்கு எடுத்து வந்தனர். கோவில் கொடி மரம் முன்பாக திருக்கம்பம் இரவு 8:00 மணிக்கு நடப்பட்டது. அக்னி வழிபாடு நடத்தும் விதமாக பூவோடு வைத்து பூஜைகள் நடந்தன. சிறப்பு பூஜைகள் முடிந்த பின் திருக்கம்பத்துக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் நடந்தது. பின் பக்தர்கள் புனித நீரை திருக்கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டனர். விழாவில், செயல் அலுவலர் கவுதமன், பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர். கம்பம் நடுதல் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர்.
26ம் தேதி கொடியேற்றம்: நாளை இரவு 12:00 மணிக்கு வாஸ்து சாந்தி, கிராம சாந்தி பூஜைகள் நடக்கின்றன. 26ம் தேதி பகல் 1:15 மணிக்கு கொடியேற்றம், பகல் 2:30 மணிக்கு பூவோடு துவக்க விழா நிகழ்ச்சியும் நடக்கிறது. 26ம் தேதி முதல் தினமும் மாலை அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. மே 2ம் தேதி, முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடக்கிறது.