பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
10:04
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. ரூ. 10 லட்சத்து 74 ஆயிரத்து 749 பணம் வசூலாகியிருந்தது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக 82 கிராம் தங்கமும், 214 கிராம் வெள்ளியும் செலுத்தியிருந்தனர். கடந்த பிப்ரவரி 22ம் தேதிக்கு பிறகு, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள கொடிமர உண்டியல், நந்தி உண்டியல், வெள்ளகோபுர உண்டியல், சாமி சன்னதி உண்டியல் உள்பட மொத்தம் 16 உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கை எண்ணப்பட்டது. அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, திருப்பூர் உதவி ஆணையர் ஆனந்த், ஆய்வர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகளும், பக்தர்கள் பேரவை உறுப்பினர்களும் பக்தர்களின் காணிக்கையை எண்ணினர். யானை பராமரிப்பு உண்டியல் 28, 239 ரூபாய் மற்றும் திருப்பணி உண்டியல் 2 லட்சத்து 22 ஆயிரத்து 873 ரூபாய் உட்பட மொத்தம், ரூ. 10 லட்சத்து 74 ஆயிரத்து 749 பணம் வசூலாகியிருந்தது. பக்தர்கள் வேண்டுதலுக்காக செலுத்திய 82 கிராம் தங்கமும், 214 கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியின் போது கோவில் திருப்பணி ஊழியர்கள் உடனிருந்தனர்.