பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
10:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழாவில், அன்னவாகனத்தில், அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. உடுமலை மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழா கடந்த 23 ம் தேதி கம்பம் போடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனையடுத்து, நகர மக்கள் பல்வேறு புண்ணிய தலங்களிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து கம்பத்திற்கு சமர்ப்பித்து வருகின்றனர். மேலும், கடந்த 26 ம் தேதி முதல் பக்தர்கள் விரதமிருந்து பூவோடு எடுத்து அம்மனை தரிசித்து வருகின்றனர். திருவிழாவையொட்டி நாள்தோறும் அம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி நடந்து வருகிறது. இன்று (29ம் தேதி) இரவு 7.00 மணிக்கு அன்னவாகனத்தில், அம்பாள் புஷ்ப அலங்காரத்துடன் அம்மன் திருவீதியுலா நடக்க உள்ளது. நாளை 30 ம் தேதி பூவோடு எடுத்தல் நிறைவு பெறுகிறது. மே 1 ம் தேதி அதிகாலை 4.00 மணி முதல் மாவிளக்கு பூஜை துவங்குகிறது. அன்று மாலை 4.00 மணிக்கு அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் மே 2 ம் தேதி மாலை 4.00 மணிக்கு நடக்கிறது.திருவிழாவையொட்டி நகர மக்களின் உற்சாகத்திற்காக, குட்டை திடலில் நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இன்று இரவு 10.00 மணிக்கு ஊரம்பு நாட்டியாஞ்சலி நாட்டிய நடன நிகழ்ச்சி நடக்கிறது. பரதம், மோகினியாட்டம், குச்சிப்புடி, கிராமிய நடனங்களை மாணவியர் அரங்கேற்றுகின்றனர்.குட்டை திடலில், அமைக்கப்பட்டுள்ள கேளிக்கை விளையாட்டு சாதனங்களில் மாலை நேரங்களில் அதிகளவு கூட்டம் காணப்படுகிறது.