வால்பாறை: வால்பாறை சந்தனமாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. வால்பாறை டவுன் ராஜிவ்நகர் சந்தனமாரியம்மன் கோவிலின் ஆறாம் ஆண்டு திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்றுமுன்தினம் காலை வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலிருந்து அம்மனுக்கு சீர்வரிசை கொண்டுவரப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தன. பின்னர் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருமஞ்சனக்கயிறு மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற அன்னதான விழாவில், தாசில்தார் தியாகராஜன், நகராட்சி ஆøணாயளர் (பொறுப்பு) வெங்கடாசலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். வால்பாறை டவுன் டோபிகாலனி ஸ்ரீகன்னிமார், ஸ்ரீகருப்பராயர் சுவாமி கோவில் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை 3.00 மணிக்கு நடுமலை ஆற்றிலிருந்து பக்தர்கள் பூவோடு எடுத்துவந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.