பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
10:04
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நடந்த திருவாசகம் முற்றும் ஓதுதல் விழாவில், சிவனடியார்கள் பாராயணம் செய்தனர்.சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவார பாடல் பெற்ற ஸ்தலமாகிய, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று திருவாசகம் முற்றும் ஓதுதல் நிகழ்ச்சி நடந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த சிவனடியார்கள், பஞ்ச கயிலாய வாத்தியங்கள் முழங்க, நான்கு ரத வீதியில் ஊர்வலம் சென்றனர். கோவிலில் நிறைவடைந்த ஊர்வலத்தையடுத்து, முற்றும் ஓதுதல் துவங்கியது. திருக்கழுக்குன்றம், சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்ட தலைவர் தாமோதரன் துவக்கி வைத்தார். காலை 9.00 மணிக்கு துவங்கிய திருவாசகம் முற்றோதல், மாலை வரை நடந்தது. திருவாசகத்தின் பெருமை குறித்து, தாமோதரன் சொற்பொழிவு நிகழ்த்தினார்.நிறைவு நிகழ்ச்சியாக, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், சிவனடியார் பிரகார உலா வந்து, தேவாரம் பாடினர். முன்னதாக, சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சிவனடியார்கள் கூறுகையில், "திருவாசகத்துக்கு உருகார்; ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி. நன்றாக மழை பொழிந்து, வறட்சி நீங்கி, மக்கள் இன்புற்று வாழவே, திருவாசகம் முற்றும் ஓதுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றனர்.