கம்பத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு பின் பூக்குழி நிகழ்ச்சி கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2013 10:05
கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை கடந்த இரண்டு வாரங்களாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் முதல் அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்தி காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த கோயில் விழாவில், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி பிரசித்தி பெற்றதாகும். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோடாங்கி பெரியசாமி பூக்குழி இறங்கி வந்தார்.கடந்த 5 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு பெரியசாமியின் மகன் வாசு,பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிக்கு தயாரானார். கோயில் நிர்வாகம் முதலில் அனுமதி மறுத்தது.பின்னர் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, அனுமதி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவில், கோயில் முன்பக்கம் அமைக்கப்பட்ட பூக்குழியில், பக்தியுடன் வாசு பூக்குழி இறங்கினார். சுற்றி நின்றிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வேண்டி எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது. சுற்றியிருந்த பெண்கள் பக்தி பரவசத்தில் குலவையிட்டு சாமி ஆடினர். பூசாரி குழுவினர் திருநீறு பூசி, சாந்தப்படுத்தினார். வேளாளப் பெருமக்கள் மஞ்சள் நீராட்டம்: நேற்று காலையில் வேளாளப் பெருமக்கள் சார்பில் மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது. டிராக்டர்களில் நூற்றுக்கணக்கான டிரம்களில் மஞ்சள் நீரை நிரப்பி, நகர் வலம் வந்து மஞ்சள் நீராட்டம் நடத்தினார்கள்.