பதிவு செய்த நாள்
04
மே
2013
03:05
ராவணனுக்கு பத்து தலைகள், இருபது கைகள். ஏன் இப்படி குறையுள்ள பிள்ளையாக பிறந்தான் தெரியுமா? விச்ரவசு மகரிஷியின் புதல்வன் குபேரன். பிரம்மாவுக்கு கொள்ளுப்பேரன். அவன் தனது தாத்தா பிரம்மாவை நினைத்து தவம்இருந்து சகலசெல்வங்களையும் பெற்றான். அதில் முக்கியமானது நவரத்தினங்களாலான புஷ்பக விமானம். அதில் நினைத்த இடத்திற்குப் பறந்து சென்று, செல்வத்தைக் கொண்டு வந்து குவிப்பான். உலகிலேயே பெரும் பணக்காரன் அவன்தான். சுமாலி என்ற அசுரன் இதைக் கவனித்தான். தனக்கும் குபேரனைப் போன்ற ஒரு பிள்ளை இருந்தால், உலகையே கட்டி ஆளலாம் என கணக்குப் போட்டான். தன் மகள் கைகனி யிடம், மகளே! அசுரர் குலம் தழைக்க, நீ விச்ரவசு முனிவரை மணந்து கொள்ள வேண்டும். உடனடியாகக் குழந்தை பெற வேண்டும். அந்தக் குழந்தை மூலம் நம் குலம் சாகாவரம் பெற்று, உலகையே ஆட்டிப்படைக்கும், என்றான். கைகனியும் சம்மதித்தாள். காட்டிலிருந்த விச்ரவசு முனிவரை சந்தித்தாள். பேரழகுப்பதுமையான அவளைக்கண்டதும் அவர் மயங்கினார். தன்னைத் திருமணம் செய்யும்படி அவளேகேட்டதால் சம்மதித்தார்.
அந்த நேரமே தன்னோடு உறவு கொள்ளும்படி அவள் வேண்டினாள். கைகனி! இது அந்திக் கருக்கல் நேரம். இந்நேரத்தில் யார் ஒருவர் உறவுகொள்கிறாரோ அவருக்கு விகாரமான குழந்தையே பிறக்கும். குழந்தை குறையுள்ளதாக இருக்கும். எனவே இரவு வரை காத்திரு, என்றார். முனிவர் மனம் மாறிவிடுவாரோ என பயந்த கைகனி, அந்நேரமே உறவு கொள்ள நிர்ப்பந்தித்தாள். முனிவரும் வேறு வழியின்றி, உறவு கொள்ளவே, அவள் கர்ப்பமானாள். அந்த சிசு, பத்து தலைகள், இருபது கைகள், பயங்கரவிழிகள் கொண்டதாக ஒழுங்கற்ற வடிவத்தில் பிறந்தது. குழந்தையைக் கண்டு தாயே பயந்துவிட்டாள். முனிவரின் பேச்சைக் கேட்காமல் இருந்ததற்காக மன்னிப்பு கேட்டாள். தவவலிமையைப் பயன்படுத்தி குழந்தைக்கு ஒற்றைத்தலை வேண்டுமென கேட்டாள். கைகனி! அது நடக்காத காரியம். என் தவவலிமையினால், அழகற்ற இவனை அழகனாக வேண்டுமானால் மாற்றுகிறேன். இவனது பத்து முகங்களும் அழகாக இருக்கும்.
வஜ்ரம் பாய்ந்த உடல், கைகளுடன் இவன் பலவானாக விளங்குவான், என்றார். அவனுக்கு தசமுகன் என்று பெயரிட்டனர். அவன், ஒருமுறை கைலாயத்திற்கு சென்றான். தன்னால், எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் கைலாயமலையை தூக்கி கடலில் போட எண்ணினான். அவ்வாறு அவன் செய்ய முயன்ற போது, சிவன் தன் கட்டை விரலால், மலையை அழுத்த அவனது பத்து கைகளும் மலைக்கு அடியில் மாட்டிக் கொண்டது. அவன் வலி தாங்காமல் ஓவென கதறி அழுதான். அந்த அலறல் உலகம் முழுமையும் கேட்டது. அப்போது அங்கு வந்த முனிவர் ஒருவர், தசமுகா! சிவனை பணிந்து பாடு. அவர் உன்னை மன்னிப்பார், என்றார். தசமுகனும் சிவனுக்குப் பிடித்த சாமகானப் பாடல்களைப் பாடினான். அதுகேட்டு மகிழ்ந்த சிவன் அவனை விடுவித்தார். தசமுகா! நீ வலி தாங்காமல் உலகமே நடுங்க அழுததால் ராவணன் என அழைக்கப் படுவாய். அந்தப்பெயரே உனக்கு நிலைக்கும். நீ புகழ் பெற்று நீண்டகாலம் வாழ்வாய், என்று ஆசிர்வதித்தார். ராவணன் என்ற சொல்லுக்கு அழுது கொண்டே இருப்பவன் என்பது பொருள். ராவணன் இலங்கை மன்னனாக பலகாலம் புகழுடன் ஆட்சி செய்தான். பிறன் மனைவியை நாடியது மட்டுமே அவன் செய்த குற்றம். அந்த குற்றத்தால் அவன் ராமனால் கொல்லப்பட்டான்.