பதிவு செய்த நாள்
29
ஏப்
2013
05:04
நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும் அவை, ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்.
ஓரங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.
மூன்று அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம்
பஞ்ச அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகும்.
அஷ்டாங்க நமஸ்காரம்: ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.
சாஷ்டாங்க நமஸ்காரம்: வழிபடுபவர் தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான அத்தனை அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.
நமஸ்கார தத்துவம்:
என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை;
எல்லாம் உன் செயல்;
என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்
கோயிலின் உள்ளே நமஸ்காரம் செய்வதெப்படி?
கோயில் வளாகத்தில் எல்லா இடங்களிலும் நமஸ்கரிப்பது உசிதமல்ல. கோயில் கர்ப்பக்கிருகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால். கொடிமரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம் கர்ப்பக்கிருகம் தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ இருந்தால், கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம். அபிஷேகம் அல்லது நிவேதனம் செய்யும் நேரங்களில் நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்கவும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வது நியதி, நமஸ்காரம் செய்வதானால் 3,5, 7,9,12 முறைகள் நமஸ்காரம் செய்ய வேண்டும், 1 அல்லது 2 முறை நமஸ்கரித்தல் கூடாது. நமஸ்காரம் செய்பவர் தலை, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நமஸ்காரம் செய்யவேண்டும்.