பதிவு செய்த நாள்
08
மே
2013
10:05
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், அக்னி நட்சத்திர முதல் பிரதோஷ வழிபாடு நடந்தது.பாகூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், அக்னி நட்சத்திர முதல் பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. முன்னதாக, மாலை 4.30 மணிக்கு கோவில் கொடிமரம் எதிரே செவிசாய்த்து அருள்பாலிக்கும் செல்வநந்திக்கு பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், பன்னீர், விபூதி ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகமும், 6.00 மணிக்கு மகா தீபாராதனையும் நடந்தது.அலங்கரிக்கப்பட்ட சுவாமி கோவில் உள்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்து மகா மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி தாசில்தார் பிரபாகரன், நிர்வாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கரநாராயணன், பாபு ஆகியோர் செய்தனர்.