பதிவு செய்த நாள்
08
மே
2013
10:05
கும்பகோணம்: பாரத நாட்டு மண்ணில் மட்டுமே தெய்வசக்தி நிரம்பியுள்ளது, என்று ஓங்கார ஆசிரம தலைவர் சுவாமி ஓங்காரநந்தா தெரிவித்தார். கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரில் மத்திய அரசால் தபால் தலை வெளியிட்டு, கவுரவிக்கப்பட்ட சித்தர் சுவாமிகள் அதிஷ்டான கும்பாபிஷேக விழா வருகிற, 24ம் தேதி காலை, 6 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் நடைபெற்ற பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஓங்கார ஆசிரமம் தலைவர், சுவாமி ஓங்காரநந்தா நிருபர்களிடம் கூறியதாவது: நம்நாடு பாதுகாக்கப்பட வேண்டும். பிறப்பால் வேறுபாடின்றி எல்லோரும் ஒற்றுமையாக இருந்து, நமது நாட்டை பாதுகாக்கவேண்டும். நம் நாட்டை பாதுகாப்பதில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், தனி அக்கறை எடுத்துக்கொண்டு, நம் பாரத நாட்டை பாதுகாக்கவேண்டும். பாரத நாடு புனித தெய்வத்தன்மை உடையது. இங்கு மகரிஷிகளும், சித்தர்களும், யோகிகளும் வாழ்ந்துள்ளனர். தத்துவங்கள் நிறைந்துள்ள நாடு நம் பாரதநாடு. நமது நாட்டை பாதுகாப்பதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. ஒவ்வொருவரும் நாளொன்றின், 24 மணி நேரத்தில், 2 மணி நேரமாவது நம் பாரத நாட்டை பாதுகாப்பது தொடர்பான பணியில் ஈடுபாடு இருக்கவேண்டும். சாதி, மத பேதமின்றி, நல்லொழுக்கத்துடன், தெய்வ சக்தி துணையோடு தான், நமது நாட்டை மீட்க முடியும். பாரத நாட்டு மண்ணில் மட்டுமே தெய்வ சக்தி உள்ளது. அதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். உலக நாடுகளில் பாரம்பரியமிக்க ஒரே நாடு இந்திய நாடு மட்டுமே. நம்மிடம் இன்று கைலாஷ் இல்லை. நம் பாரத நாட்டை பாதுகாப்பதில் அனைவரும் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ஓங்கார ஆசிரம அகில உலக செயலாளர் கோடீஸ்வரநந்தா உடனிருந்தார்.