பதிவு செய்த நாள்
15
மே
2013
10:05
திருத்தணி : மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. திருத்தணி காந்தி நகரில் உள்ள கங்கை அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில், ஜாத்திரை திருவிழா நடக்கிறது.நேற்று காலை, 8:00 மணிக்கு கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, கரகம் பூ அலங்காரத்துடன் தெருக்களில் திருவீதியுலா வந்தது. அப்போது, பெண்கள் தீபாராதனை எடுத்து வழிப்பட்டனர். மேலும், கரகம் வீதிகளில் சென்ற போது, பக்தர்கள் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி கொண்டாடினர். இதே போல், திருத்தணி அடுத்த, கீழாந்தூர் கிராமத்தில் உள்ள கங்காதேவி கோவிலில், 19ம் ஆண்டு ஜாத்திரை விழா நடந்தது. காலை, 6:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை, 10:00 மணிக்கு கூழ்வார்த்தில் நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு பக்தர்கள் உடம்பில் அலகு குத்தி டிராக்டரை இழுத்தனர். இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் மற்றும் பூங்கரகம் சிறப்பு அலங்காரத்துடன் திருவீதியுலா நடந்தது. இரவு, 10:00 மணிக்கு நாடகம் நடந்தது.பள்ளிப்பட்டுஇதேபோல், திருத்தணி அடுத்த, மாம்பாக்கசத்திரம் கிராமத்தில் உள்ள முக்கோட்டி அம்மன் கோவிலில், நேற்று ஜாத்திரை விழா வெகு விமரிசையாக நடந்தது. பள்ளிப்பட்டில் உள்ள, கொள்ளபுரி அம்மன் கோவில் ஜாத்திரை திருவிழாவில், காலையில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மதியம், 2:00 மணிக்கு கிராம பெண்கள் தலையில், பொங்கல் கூடையுடன் ஊர்வலமாக ஈச்சம்பாடி செல்லாலம்மன் கோவில் வளாகத்திற்கு சென்றனர். அங்கு பொங்கல் வைத்து, மாவு விளக்கு ஏற்றி வழிப்பட்டனர். இரவு, பள்ளிப்பட்டு சுற்றி உள்ள எல்லை கற்களுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். வரும், 22ம் தேதி வரை ஜாத்திரை விழா நடக்கிறது.ஆர்.கே.பேட்டைகங்கையம்மனுக்கு பெண்கள் நேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.சித்திரை மாதத்தில், கங்கையம்மனுக்கு ஜாத்திரை விழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆர்.கே.பேட்டை பொன்னியம்மன் கோவிலில் உள்ள, கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.ஜாத்திரை விழாவை முன்னிட்டு, கோவில் மண்டபம் வேப்பிலை தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை, 9:00 மணியளவில், கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் இட்டு, அம்மனுக்கு படையல் வைத்தனர். பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனாக ஆடு, கோழி உள்ளிட்டவற்றை பலி கொடுத்தனர். மதியம், 12:00 மணியளவில் கூழ் வார்க்கப்பட்டது. மாலை, 3:00 மணியளவில் கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பக்தர்கள், அம்மனின் பல்வேறு அவதாரங்களை, மாறுவேடமாக அணிந்து ஊர்வலம் வந்தனர்.