பதிவு செய்த நாள்
16
மே
2013
10:05
கும்பகோணம் : திருநாகேஸ்வரம், நாகநாத சுவாமி கோவிலில், கொடியேற்றத்துடன் வைகாசி விசாகப் பெருவிழா, நேற்று துவங்கியது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம், நாகநாத சுவாமி கோவில் உள்ளது. பிறையணியம்மை, கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாத சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். நேற்று காலை, 7:25 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முன்னதாக, காலை, 6:30 மணிக்கு, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், கட அபிஷேகம் மற்றும் விசேஷ தீபாரதனையும், ஆராதனைகளும் நடந்தன. விழா நாட்களில், தினசரி இரவு, பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடக்கிறது. 21ம் தேதி, சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான, 24ம் தேதி, காலை, 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் வீதியுலாவும்; பகல், 12:30 மணிக்கு, சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரி வைபவமும்; இரவு, 8:00 மணிக்கு, சுவாமி, அம்பாள் ஏகாசன மஞ்சத்தில் வீதியுலாவும் நடக்கிறது.