பதிவு செய்த நாள்
16
மே
2013
10:05
ஷீரடி,: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, ஷீரடி சாய்பாபா கோவிலின், வருமானம், 5 ஆண்டுகளில், 1,441 கோடியை எட்டியுள்ளது; ஒவ்வொரு ஆண்டும், உண்டியல் வசூல், 22 சதவீதம் அதிகரித்துள்ளது.இதுகுறித்து, கோவிலின் நிர்வாக அதிகாரி கிஷோர் மோர் கூறியதாவது: கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், சாய்பாபா கோவிலுக்கு, நாள்தோறும், 20 ஆயிரம் பக்தர்கள் வந்தனர். தற்போது, இந்த எண்ணிக்கை, 60 ஆயிரமாக உள்ளது. வார விடுமுறை நாட்களில், பக்தர்கள் வருகை, ஒரு லட்சமாக உள்ளது. சிறப்பு விழாக்கள் மற்றும் திருவிழாவின் போது, இரண்டு முதல் மூன்று லட்சம் பக்தர்கள் வருகின்றனர். தற்போது நாள் ஒன்றுக்கு, சராசரியாக, 45 லட்சம் ரூபாய், கோவிலுக்கு வருமானம் வருகிறது. அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்காக, 828 கோடி ரூபாய் செலவில், பல நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், 160 கோடி ரூபாய் மருத்துவமனை மற்றும் பிரசாத மையம் அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
அறக்கட்டளையின் வரவு செலவு கணக்கு விவரங்கள், அரசு அங்கீகரித்த அமைப்பின் மூலம், தணிக்கை செய்யப்பட்டுள்ளன. தணிக்கை அறிக்கை, மாநில சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். பக்தர்கள் கோவில் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன், வாரத்திற்கு ஒரு முறை எண்ணப்பட்டன. தற்போது, வாரத்திற்கு இரண்டு முறை எண்ணப்படுகின்றன. அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு கிஷோர் குமார் கூறினார்.