பதிவு செய்த நாள்
17
மே
2013
10:05
தஞ்சாவூர்: ""தஞ்சையில் 79வது கருட சேவைப்பெருவிழா ஹிந்து அறநிலையத்துறைக்கு உள்பட்ட அரண்மனை தேவஸ்தானம் சார்பில் இம்மாதம் 30ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடக்கிறது, என, ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் பொருளாளர் மற்றும் மேலாளர் ஞானசேகரன் மேலும் கூறியுள்ளதாவது: கருட சேவை விழா குடந்தை பெரிய தெரு, ஆழ்வார் திருநகரி, திருநாங்கூர் திருப்பதி ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதை தரிசித்தால், நான்கு அஸ்வமேத யாகத்தை தரிசித்த பலன் பக்தருக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். இதன்படி, தஞ்சையில், 79வது கருட சேவைப்பெருவிழா இம்மாதம் 30ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடக்கிறது.விழா துவக்க நாளான வரும் 30ம் தேதி, காலை 11 மணி முதல் 1 மணி வரை மேலசிங்க பெருமாள் கோவிலில் ஆழ்வார் மங்களாசாஸனம் நடக்கிறது. தொடர்ந்து, ஆழ்வாருக்கு கருடசேவை 31ம் தேதியும், நவநீத சேவை மறுநாள் (ஜூன் மாதம்) ஒன்றாம் தேதியும், விடையாற்றி விழா 2ம் தேதியும் என, நான்கு நாள் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும்31ம் தேதியன்று, 23 பெருமாள்களும் கருட வாகனத்தின் மீது எழுந்தருளி, அவரவர் கோவில்களில் இருந்து காலை ஆறு மணிக்கு புறப்பட்டு எட்டு மணியளவில் தஞ்சை நகரத்திலுள்ள கொடிமரத்து மூலையை வந்தடைவர்.பின்னர், அங்கிருந்து அன்னபட்சி வாகனத்தில் திருமங்கை ஆழ்வாளர் முதலிலும், தொடர்ந்து, நீலமேகர், நரசிம்மர், கல்யாண வெங்கடேசர், வேளூர் வரதராஜர், படித்துறை வெங்கடேசர், தெற்கு வீதி கலியுக வெங்கடேசர், அய்யன் கடைத்தெரு பஜார் ராமன் என பெருமாள் ஸ்வாமிகள் வரிசையாக கருட வாகனத்தில் கீழராஜ வீதி, தெற்கு வீதி, மேலராஜ வீதி, வடக்கு வீதி வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்து, மீண்டும் கொடிமரத்து மூலையை வந்தடைவர். இதைத்தொடர்ந்து, அங்கிருந்து வந்த வழியே கோவில்களுக்கு காலை 11 மணிக்கு சென்றடைவர். இதேபோல ஒன்றாம் தேதியன்றும், கருடசேவை தரிசனம் கொடிமரத்து மூலை உள்ளிட்ட இடங்களில் நடக்கும். பக்தர்கள் தரிசனம் செய்யலாம். முடிவில், 2ம் தேதியன்று, விடையாற்றி விழாவில், பிரம்மோற்ஸவம் முடிந்தபின், தேவர்களை அவரவர் இருப்பிடம் அனுப்பி வைக்கும் வைபவம் நடக்கும். இதில், காலை 10 மணிக்கு வெண்ணாற்றங்கரையில் நீராட்டு விழா, மதியம் 12 மணிக்கு துவங்க மேலசிங்கர் கோவிலில் திருமஞ்சனம், தீபாராதனை நடக்கும். விழா ஏற்பாட்டை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே தலைமையில் ஸ்ரீ ராமானுஜ தர்சன சபையினர், ஹிந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.