பதிவு செய்த நாள்
20
மே
2013
10:05
மேலூர்: திருவாதவூர் திருமறைநாதர் பஞ்ச மூர்த்திகளுடன் மேலூருக்கு எழுந்தருளும் "மாங்கொட்டை திருவிழா நேற்று நடந்தது. திருவாதவூர் கோயிலின் வைகாசி விழா, மே 15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக, சுவாமியும், அம்மனும் பஞ்சமூர்த்திகளுடன் நேற்று மேலூருக்கு எழுந்தருளினர்.விழா ஏன்?பல ஆண்டுகளுக்கு முன், மேலூர் சிவனடியார் ஒருவர், திருவாதவூருக்கு நடந்து சென்று சுவாமியை வழிபட்டார். ஒருசமயம், உடல் நலக்குறைவால் செல்ல முடியவில்லை. இவருக்காக, இவரது சீடரான மேலூர் தாசில்தார், மேலூரில் சிவன் கோயில் கட்டி கொடுத்தார். ஆனாலும், "திருவாதவூர் செல்ல முடியவில்லையே என்று சிவனடியார் வருத்தப்பட, அங்கிருந்து சிவனே, மேலூருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனாலேயே, இன்றும் ஊர் எல்லையில், மேலூர் தாசில்தாருக்கு மரியாதை செலுத்திய பிறகு, சுவாமி புறப்பாடு நடக்கிறது. வைகாசி மாதம் மாம்பழ சீசனாக உள்ளதால், ஆரம்ப காலத்தில் சுவாமியை எதிர்பார்த்து, ரோட்டின் இருபுறமும் பக்தர்கள், மாம்பழத்தை சுவைத்தபடி காத்திருப்பர். மறுநாள் ரோட்டின் இருபுறமும் அவர்கள் விட்டுச் சென்ற மாங்கொட்டைகள் குவிந்து கிடக்கும். இதனாலேயே இத்திருவிழாவிற்கு "மாங்கொட்டை திருவிழா என பெயர் வந்ததாக பெரியோர் கூறுகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக மே 22ல் திருக்கல்யாணம், 23ல் தேரோட்டம் நடக்கிறது.