பதிவு செய்த நாள்
21
மே
2013
10:05
ஆத்தூர்: ஆத்தூரில், மழை பெய்ய வேண்டி, கன்னிப் பெண்கள், வீடு வீடாக சென்று, யாசகம் (பிச்சை) எடுத்து வந்து, சாப்பாட்டை முச்சந்தியில் வைத்து, பூஜை செய்தனர். ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், பருவமழை பொய்த்து போனதால், வசிஷ்ட நதி, சுவேத நதி, அணை, ஏரி, குளம், விவசாய கிணறு உள்ளிட்ட நீர் நிலைகள் வறண்டு விட்டது. பாசனத்துக்கு தண்ணீர் இல்லாமல், பயிர்கள் காய்ந்து கருகுவதுடன், மனிதர்கள் மற்றும் கால்நடைக்கு கூட குடிநீர் கிடைக்காமல், கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இரு வாரங்களுக்கு முன், வசிஷ்ட நதியில் உள்ள, பேளூர் தான்தோன்றீஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், கூகையூர் ஸ்வர்ணபுரீஸ்வரர் ஆகிய பஞ்ச பூத ஸ்தலங்கள் மற்றும், 21 சிவாலயங்களில், மழை வேண்டி வேள்வி, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டது. அதேபோல், ஆத்தூர், தலைவாசல் பகுதியில், மழை வேண்டி, "கொடும்பாவி இழுத்துச் சென்று, பெண்கள் ஒப்பாரி வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், இரவு, 10 மணியளவில், ஆத்தூர் நகராட்சி, நான்கு மற்றும் ஐந்தாவது வார்டு, முல்லைவாடி பகுதியை சேர்ந்த, "கன்னி பெண்கள், வீடு வீடாக சென்று, யாசகம் (பிச்சை) எடுத்து வந்து, சாப்பாட்டை முச்சந்தியில் வைத்து, பூஜை செய்தனர். இரவு, 11 மணியளவில், சுமங்கலி பெண்கள் உள்ளிட்டோர், முச்சந்தியில் அமர்ந்து, மழை வேண்டி ஒப்பாரி வைத்து அழுதனர். நள்ளிரவு, 12 மணியளவில், வருண பகவான் உள்ளிட்ட ஸ்வாமிக்கு வழிபாடு செய்தனர். வினோத பூஜையில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.