பதிவு செய்த நாள்
25
மே
2013
11:05
மதுரை: தெற்காசியாவில் ராமாயணத்தின் பாதிப்பின்றி, யாரும் இருக்க முடியாது. வாழ்வின் சின்னச்சின்ன விஷயங்களில், அதன் பாதிப்பை உணரலாம், என, ஓய்வு பெற்ற, சென்னை ஐகோர்ட் நீதிபதி சந்துரு பேசினார். கம்பன் கழக அறக்கட்டளை சார்பில், மதுரை ஆண்டாள்புரம் வசுதாரா வளாகத்தில், கம்பன் விழா துவங்கியது. தலைவர் சாலமன் பாப்பையா தலைமை வகித்தார். துணைத் தலைவர் சங்கர சீதாராமன் வரவேற்றார். செயலாளர் புருஷோத்தமன் அறிக்கை வாசித்தார். நீதிபதி சந்துரு பேசியதாவது:அனைத்து மதங்களிலும், ஒத்த கருத்துக்கள் உள்ளன. மதங்களை அரசியலாக்கி, ஆதாயமாக்குவதை கண்டிக்க வேண்டும். தெற்காசியாவில், ராமாயணத்தின் பாதிப்பின்றி, யாரும் இருக்க முடியாது. வாழ்வின் சின்னச்சின்ன விஷயங்களில் கூட, அதன் பாதிப்பை உணரலாம். சென்னை துறைமுகத்தில், ஒரு பெண் பணிபுரிந்தார். அவரது மகன் விபத்தில் பலியானார். அப்பெண்ணிற்கு, ஏற்கனவே கர்ப்பப்பை அகற்றப்பட்டு விட்டது. அத்தம்பதிக்கு, வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்தது. குழந்தையை வாரிசாக அங்கீகரித்து, அதை பராமரிக்க விடுப்பு வழங்க, பெண் ஊழியர், துறைமுக நிர்வாகத்தில் அனுமதி கோரினார். நிர்வாகம்,"இது நமது மரபில் இல்லாதது என, அனுமதி மறுத்தது. பெண் ஊழியர், ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.நான், ""வாடகைத்தாய் முறை பற்றி ராமாயணத்தில், குறிப்பு உள்ளது. இது, ஒழுக்கம் தவறிய செயல் அல்ல. ஓராண்டு விடுப்பு அனுமதிக்க வேண்டும், என, உத்தரவிட்டேன். ஒரு தொழிற்சாலை ஊழியர் மனைவி சீதாலட்சுமி. அவர் மீது, மற்றொரு தொழிலாளி ஆசைப்பட்டார்.
இந்த முன்விரோதத்தில், சீதாலட்சுமி கொலை செய்யப்பட்டார். மற்றொரு தொழிலாளியை, தொழிற்சாலை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. கீழ் கோர்ட், அவரை விடுவித்தது. நிர்வாகம் வேலை வழங்க மறுத்தது. இதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில், ""மனைவியை இழந்த கணவன், அதே தொழிற்சாலையில் பணிபுரிகிறார். உங்களை, மீண்டும் வேலையில் சேர்க்க உத்தரவிட்டால், அங்கு அமைதி நிலவாது. ராவணனுக்கு என்ன தண்டனையோ, அதே தண்டனை உங்களுக்கும் விதிக்கப்படுகிறது, என, உத்தரவிட்டேன். தீர்ப்புகளில் மேற்கோள் காட்ட, இதிகாச உதாரணம் தேவைப்படுகிறது. அதன், அறநெறி தெரியாமல் இருக்க முடியாது. இளைஞர்களுக்கு தெளிவாகச் சொல்ல வேண்டும், என்றார்.