சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2013 11:05
கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி பதியில் வைகாசி திருவிழாநேற்று(24ம்தேதி) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு கொடிபட்டம் பிரகார வலம் வருதலும் தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. பாலபிரஜாபதி அடிகளார் கொடியேற்றினார். தொடர்ந்து பணிவிடை, வாகன பவனி, மதியம் 12 மணிக்கு அன்னதர்மம், இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் திருவீதி உலா வருதல் நடந்தது. இன்று இரவு 7 மணிக்கு மயில் வாகனத்தில் அய்யா திருவீதி உலா வருதல், நாளை (3ம் நாள்) இரவு 7 மணிக்கு அன்ன வாகனத்தில் வெள்ளை சாற்றி திருவீதி உலா வருதல், 4ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் திருவீதி உலா வருதலும், 5ம் நாள் திருவிழாவில் பச்சை சாற்றி சப்பர வாகன பவனி, 6ம் நாள் சர்ப்ப வாகன பவனி, 7ம் நாள் கருட வாகனத்தில் திருவீதி உலா வருதல் ஆகியன நடக்கிறது. கலிவேட்டை 8ம் நாள் திருவிழவில் அய்யா வைகுண்ட சாமி கலிவேட்டையாடுகிறார். இதையொட்டி மாலை 5 மணியளவில் வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி பதி வலம் வந்து முத்திரி கிணற்றின் அருகில் கலிவேட்டையாடுகிறார். தொடர்ந்து செட்டிவிளை, சாஸ்தான்கோவில்விளை, சோட்டப்பணிக்கன்தேரிவிளை, காமராஜபுரம் ஆகிய இடங்களுக்கு சென்று பக்தர்களுக்கு அருள் பலிக்கிறார். பின்னர் வடக்கு வாசலில் தவகோலத்தில் அய்யா காட்சியளிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தேரோட்டம் 11ம் நாள் (ஜூன் 3ம்தேதி) திருவிழாவன்று மதியம் 12 மணிக்குதேரோட்டம் நடக்கிறது. முன்னதாக அய்யா வைகுண்ட சாமி பதியில் இருந்து பல்லக்கு வாகனத்தில் பவனியாக வந்துதேரில் எழுந்தருளுகிறார். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அய்யா அரகர சிவசிவ அரகரா என்ற பக்திகோஷம் முழங்க 4 ரத வீதிகள் வழியாகதேரை வடம்பிடித்து இழுக்கின்றனர். பிற்பகல் 3 மணியளவில் வடக்கு வாசலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுருள் வைத்து அய்யாவை வழிபடுகின்றனர்.