பதிவு செய்த நாள்
25
மே
2013
12:05
இன்று வைகாசி அனுஷம். காஞ்சி மகாபெரியவரின் ஜென்ம நட்சத்திரம் . இதையொட்டி, அவர் செய்த அதிஅற்புத நிகழ்ச்சி ஒன்றைக் கேளுங்கள். 1986ல் ஒரு ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை. காஞ்சி சங்கர மடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். ஒரு ஓரத்தில், ஐந்து வயது குழந்தையுடன் ஒரு பக்தர் அழுதபடியே நின்று கொண்டிருந்தார். அப்போது மகாபெரியவருடன் எப்போதும் இருக்கும் சந்திரமவுலி அருகில் இருந்தார். ஸ்ரீகண்டன் என்பவர் உடனிருந்தார். ஸ்ரீகண்டனை அழைத்த பெரியவர்,கையில் குழந்தையுடன் ஒருவர் அழுது கொண்டிருக்கிறாரே! ஏன் அழுகிறார் என்று விசாரி, என்றார். ஸ்ரீகண்டனும், அவரிடம் சென்று அவரது கவலைக்கான காரணத்தை பெரியவர் கேட்டு வரச் சொன்ன தகவலைத் தெரிவித்தார். ஐயா! என் கையில் இருப்பது ஐந்து வயது பெண் குழந்தை. உடல்நிலை சரியில்லை. டாக்டரிடம் காண்பித்தேன். குழந்தைக்கு இருதயத்தில் துவாரம் இருக்கிறது, ஆபரேஷன் செய்ய வேண்டும், இருப்பினும் கொஞ்சம் சிரமம் தான் என்றும் அவர் சொல்லி விட்டார். ஆபரேஷனுக்கு தேதி குறித்தாயிற்று. நம் பெரியவாளிடம் குழந்தையைக் காண்பித்து, அவரிடம் சரணாகதி அடைந்து விட்டால், குழந்தை குணமாகி விடும் என நம்பி வந்துள்ளேன். ஒருவேளை என் குழந்தைக்கு ஆபத்து என்றால், ஆபரேஷன் செய்து அது இறப்பதை விட பெரியவரின் பாதார விந்தங்களை அது அடையட்டுமே என கருதுகிறேன், என்றார்.
இந்த விஷயத்தை ஸ்ரீகண்டன் பெரியவரிடம் தெரிவித்தார். பெரியவர் உடனே குழந்தையை கொண்டு வரும்படி சொன்னார். அதை ஆசிர்வதித்தார். அருகிலிருந்த சந்திரமவுலியிடம் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து, இதில் சிறு துண்டை நறுக்கி குழந்தைக்கு கொடுக்கச்சொல், சரியாகி விடும், ஆபரேஷன் தேவையிராது, என்று சொல்லி, அந்த பக்தரை ஊருக்கு அனுப்பி விட்டார். அதன்பின், குழந்தையை டாக்டர் குறிப்பிட்ட நாளில் அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்த போது ஆச்சரியமடைந்தனர்.இருதயத்தில் துவாரமா! இந்தக் குழந்தைக்கா! இல்லையே! என்றார்கள். அன்று இருந்த துவாரம் இன்று மறைந்தது எப்படி? என்று குழந்தையின் தந்தையிடம் கேட்டார்கள். நடந்ததை விளக் கினார் அந்த தந்தை.டாக்டர்கள் ஆச்சரியப்பட்டார்கள். பின், மகாபெரியவரிடம் வந்து நடந்ததைச் சொல்லிமகிழ்ச்சியுடன் ஆசிபெற்று சென்றார்கள்.இதன்பின் மகாபெரியவர்முக்தியடைந்து விட்டார்கள். 2006ல், ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஒருவர் பெரியவரின் பிருந்தாவனத்திற்கு வந்தார். அங்கு பூஜை செய்து கொண்டிருந்த சந்திரமவுலியிடம் திருமணப்பத்திரிகை ஒன்றைக் கொடுத்து,பிரசாதம் தாருங்கள், எனக் கேட்டார். சந்திரமவுலியும் அவருக்கு மாம்பழம், துளசி, கற்கண்டு கொடுத்தார். வந்தவர் கண்களில் கண்ணீர்.இவர் ஏன் அழுகிறார்! ஒருவேளை புளிக்கிற மாம்பழத்தைக் கொடுத்து விட்டோம் என வருத்தப்படுகிறாரோ! என சந்திரமவுலி நினைத்து அவரிடமே காரணம் கேட்டார்.சுவாமி! நினைவிருக்கிறதா! 20 ஆண்டுகளுக்கு முன் உங்களிடம் தான் மகாபெரியவர் ஒரு மாம்பழத்தைக் கொடுத்து இதயநோயால் பாதிக்கப்பட்ட என் மகளுக்கு கொடுத்து குணமாக்கினார். அந்தக் குழந்தைக்கு தான் இப்போது திருமணம். இன்றும் அதே போல மாம்பழத்தை நீங்கள் தருகிறீர்கள். இதை பெரியவர் மீண்டும் எனக்கு உங்கள் மூலம் தரும் பிரசாதம் என்றே நினைக் கிறேன். குழந்தையை ஆசிர்வதியுங்கள், என்றார்.வாழும் தெய்வமான மகாபெரியவர் நம் அனைவரது இதயக்கனியாக இன்றும் விளங்குகிறார்.