பதிவு செய்த நாள்
27
மே
2013
11:05
கிருஷ்ணகிரி: மழை வேண்டி பொதுமக்கள், ஊரை காலி செய்து விட்டு, வலசை சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மழை பொய்த்து போகும் போது, மாவட்டத்தின் பல பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மழைவேண்டி, ஊரை காலி செய்து விட்டு அருகில் உள்ள வனப்பகுதி அல்லது தோட்டத்திற்கு செல்லும் நிகழ்ச்சி (வலசை)யை காலம் தொட்டு நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில், போதிய மழையில்லாததால், கிருஷ்ணகிரி அடுத்த மேல் பட்டியில், நேற்று மழை வேண்டி பொதுமக்கள் வலசை சென்றனர். நேற்று காலை, வீடுகளை பூட்டி விட்டு, கால்நடைகளுடன் பொதுமக்கள் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர். இதனால், மேல்பட்டி கிராமமே வெறிச்சோடி காணப்பட்டது. வலசை சென்ற பொதுமக்கள், தோட்ட பகுதியில் சமையல் செய்து மதிய உணவை சாப்பிட்டனர். இந்நிகழ்ச்சியில், மேல்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமன்றி அவர்களது உறவினர்களும் கலந்து கொண்டனர். வலசை சென்ற தோட்டம் பகுதியில் பொறி கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை வியாபாரிகள் வைத்திருந்தனர். மாலை நேரத்தில் அங்குள்ள அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்த பொதுமக்கள், ஆடு பலியிட்டு ஊர் திரும்பினர். இவ்வாறு செய்தால், மழை பெய்யும் என்பது ஐதீகம், என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.