பதிவு செய்த நாள்
28
மே
2013
11:05
பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் நரசிம்ம பெருமாள் கோயில் வருஷாபிஷேகம் மற்றும் நரசிம்ம ஜெயந்தி விழா நடந்தது.கீழப்பாவூரில் பாண்டிய மன்னர்கள் காலத்தை சேர்ந்த பழமை வாய்ந்த நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருஷாபிஷேகம் மற்றும் நரசிம்ம ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது. விழாவில் நரசிம்மருக்கு 108 கலஷாபிஷேகம், பால்அபிஷேகம், 108 இளநீர் அபிஷேகம் மற்றும் 16வகை மலர்களால் புஷ்பயாகமும், 16 வகை மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், 12 வித திரவியங்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. விழாவில் பனையூர் பொறியாளர் ராஜராமனின் பிரகலாதசரித்திரம் மற்றும் மதுரை ரிக்வேத பாடசாலை சங்கரமகாதேவசர்மாவின் பக்தி சொற்பொழிவு, சுதர்சனியின் பரதநாட்டியம் நடந்தது. விழாவில் நெல்லை எம்பி., ராமசுப்பு, ஆலங்குளம் எம்.எல்.ஏ.,பி.ஜி. ராஜேந்திரன், நெல்லை மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் அன்புமணி, தென்காசி தெற்குபகுதி அறநிலையத்துறை ஆய்வாளர் ஏமையா, குற்றாலம், குற்றாலநாதர் கோயில் செயல் அலுவலர் வெங்கடேஷன், தென்னகரயில்வே கூடுதல் பொதுமேலாளர் டாக்டர் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.முன்னதாக நரசிம்மபெருமாள் கோயில் மேற்குபகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளத்தை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் தமிழ்மணி பார்வையிட்டு தெப்பக்குளத்தின் நடுவில் நீராழி மண்டபம் அமைக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். ஏற்பாடுகளை நரசிம்மசுவாமி கைங்கர்யசபை மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.