பதிவு செய்த நாள்
28
மே
2013
11:05
திருக்கழுக்குன்றம்: எடையூர், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை, புனரமைத்து, பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரி உள்ளனர். திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எடையூர் கிராம மலையின் மேல், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கி.பி. 1252ல், முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்ட, பழமை வாய்ந்த இக்கோவில், ஆகம விதிகளின்படி அமைத்த கற்
கோவில் ஆகும். இது, இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மலை கோவிலுக்கு செல்ல, 600 படிக்கட்டுகள் உள்ளன. முதல் படிக்கட்டின் அருகில், ஒரு கற்பாறையில் சுயம்பு வடிவாக வலம்புரி விநாயகர் சிற்பம் ஒரு புறமும், கஜம் எனப்படும் யானை மற்றொரு புறமும் காட்சியளிக்கின்றன. கோவில் கோபுரம், மூன்று மாடங்கள் கொண்டது. மூலவர் சுயம்பு வடிவாக கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். நடுவே ஸ்ரீ கரமும், மீன் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. பூதத்தாழ்வாரும், பேயாழ்வாரும் பெருமாளை மங்கள சாசனம் செய்துள்ளனர். வரலாற்று பெருமை கொண்ட இத்தலத்தில், பல ஆண்டுகளுக்கு முன், ஒவ்வொரு ஆண்டும் விழாக்கள் எடுத்து, பெருமாள் வீதி உலா வருவது வழக்கத்தில் இருந்து வந்தது. மார்கழி புரட்டாசி மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்துள்ளன. தற்போது, போதிய பராமரிப்பின்றி கோவில் சீரழிந்து வருகிறது. இதை புனரமைத்து தினசரி பூஜைகள் நடத்த அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, இக்கோவிலின் பக்தர் முதியவர் ஒருவர் கூறுகையில் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு, கடந்த, 60 ஆண்டுகளாக, குடமுழுக்கு நடக்கவில்லை. எனவே, கோவிலை புதுப்பித்து, கும்பாபிஷேகம் நடத்தி, தினசரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார். இந்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ""நிதி ஒதுக்கீடு கிடைத்தபின் கோவில் புனரமைப்பு பணிகள் துவக்கப்படும், என்றார்.