பதிவு செய்த நாள்
28
மே
2013
11:05
திருத்தணி: தணிகாசலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கவுள்ளதை தொடர்ந்து, நேற்று காலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. திருத்தணி அக்கைய்யாநாயுடு சாலையில், தணிகாசலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நாளை (29ம் தேதி) காலை, 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் நடக்கிறது. இதற்காக,கோவில் வளாகத்தில், மூன்று யாக சாலைகள் மற்றும், 108 கலசங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. கோவிலின் முன்பு ஒரு யாகசாலை அமைத்து, நான்கு குருக்கள் வேத மந்திரங்கள் ஓத, கணபதி பூஜையுடன், கணபதி ஹோமம் துவங்கியது. கோவில் குருக்கள் நடராஜ சாஸ்திரி யாகபூஜையை துவக்கி வைத்தார். தொடர்ந்து நவக்கிரக ஹோமம், கோ பூஜை மற்றும் தனபூஜை நடந்தது. முன்னதாக, காலை, 6:30 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, சாந்தி பூஜை மற்றும், மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, நாளை காலை, 6:00 மணிக்கு சுமங்கலி பூஜையும், காலை, 9:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு மற்றும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.