பதிவு செய்த நாள்
29
மே
2013
10:05
தஞ்சாவூர்: குருபெயர்ச்சியை யொட்டி, திட்டை, வசிஷ்டேஸ்வரர் கோயிலில், குருபகவானை தரிசிக்க, பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். தஞ்சை அடுத்த திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது. இது, மந்திர ஒலிகள் தோன்றிய ஸ்தலம் என, கருதப்படுகிறது. கோவிலின் நான்கு மூலைகளிலும், பஞ்ச லிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டு, மத்தியில் மூலவர் ஐந்தாவது லிங்கமாக, காட்சியளிக்கிறார். தானே தோன்றிய சுயம்புமூர்த்தியை நோக்கி, வசிஷ்டர் தவம் செய்து, உருவேற்றியதால் வசிஷ்டேஸ்வரர் என, பெயர் பெற்றது. திட்டையில், லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும், மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திரக்காந்த கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. சந்திரன், இறைவனுக்கு மேல், சந்திர காந்தக்கல்லாக அமர்ந்து, காற்றிலிருந்து ஈரப்பத்தை ஈர்த்து, 24 நிமிடங்களுக்கு, ஒரு சொட்டு வீதம், நித்யாபிஷேகம் செய்கிறார் என, கூறப்படுகிறது. நவக்கிரஹங்களில், குருபகவான் சுபபலம் பொருந்தியவராக காட்சியளிக்கிறார். திட்டை கோயிலில், சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையே, எங்கும் இல்லா நிலையில் நின்ற கோலத்தில், குருபகவான், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு, குருபெயர்ச்சி விழாவையொட்டி, சிறப்பு பூஜை, வெகுவிமரிசையாக நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பரிகார அர்ச்சனை நடந்தது. காலை, 10:30 மணி முதல், 12:00 மணி வரை ஹோமமும், பகல், 12:45 மணிக்கு அபிஷேகமும், மங்கள தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு ஆராதனை, இரவு வரை நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, பல ஆயிரம் பக்தர்கள், ஒரேநாளில் வழிபட்டனர். தொடர்ந்து, வரும், 6ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை, 7ம் தேதி முதல், 10ம் தேதி வரை, வேத விற்பன்னர்களால், பரிஹார ஹோமம் நடத்தப்படுகிறது. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், தஞ்சையிலிருந்து சிறப்பு பஸ்கள், நாளை வரை, இயக்கப்படுகிறது.