கன்னியாகுமரி: சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் விமரிசையாக நடந்தது. தென்மாவட்டங்களில் புகழ் பெற்ற சாமிதோப்பு அய்யாவைகுண்டசாமி பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய மூன்று மாதங்களில் 11 நாட்கள் கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழாக்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா கடந்த 24 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை பணிவிடை, உச்சிபடிப்பு, வாகன பவனி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. திருவிழாவின் 11-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு மதியம் 12 மணியளவில் அய்யா பதியில் இருந்து தேருக்கு எழுந்தருளினார். மலர்களாலும், வண்ண தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரை ஆயிரகணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். மழையையும் பொருட்படுத்தாமல் "அய்யா அரகர சிவசிவ என்ற பக்தி கோஷம் முழங்க பக்தர்கள் தேரை நான்கு ரத வீதி வழியாக இழுத்து வந்தனர். நான்கு ரத வீதி வழியாக ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பிற்பகல் 2 மணியளவில் தேர் வடக்கு வாசலில் நின்றது. அப்போது ஆயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் பலமணிநேரம் காத்திருந்து அய்யாவுக்கு சுருள் வைத்து வழிபட்டனர். மாலை 6 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது. இரவு கலைநிகழ்ச்சி, அன்னதர்மம், கொடியிறக்கம் நடந்தது. தேரோட்டத்தை காண நெல்லை, துத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஆயிரகணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவிலில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் கன்னியாகுமரி டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.