பதிவு செய்த நாள்
06
ஜூன்
2013
09:06
பழநி: பழநி "ரோப்கார் பெட்டிகள் 250 அடி உயரத்தில் பழுதாகி நின்றதால், அதிலிருந்த பக்தர்கள், குழந்தைகள் அலறினர். மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின் இவர்கள் "டோலி மூலம் மீட்கப்பட்டனர்.
தமிழக கோயில்களில் "ரோப்காரில் பயணிக்கும் வாய்ப்பு பழநியில் மட்டுமே உள்ளது. கடந்த 2004 நவ., 3ல் துவக்கப்பட்ட ரோப்காரில் 3 நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு செல்லலாம். ஒரு மணி நேரத்தில் 800 பேர் வரை பயணிக்க முடியும். 2007 ஆக., 27ல் ரோப்கார் நழுவி விழுந்ததில் 4 பேர் இறந்தனர். இதன்பின் ரோப்கார் இயக்கும் விதம் மாற்றி அமைக்கப்பட்டது. எட்டு பெட்டிகள் மூலம் ஒரு மணி நேரத்தில் 400 பேர் பயணிக்கும் வகையில் தொழில்நுட்பம் மாற்றப்பட்டது. காலை 7.30 முதல் பகல் 1.30 மணி வரையும், பகல் 2.30 முதல் இரவு 8.30 மணி வரையும் இயக்கப்படுகிறது.
பழுது: நேற்று காலை வழக்கம் போல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் காலை 7.45 மணிக்கு ரோப்கார் இயங்கத் துவங்கியது. எட்டு பெட்டிகளில் ஏழு குழந்தைகள், கோயில் அலுவலர் உட்பட 24பேர் இருந்தனர். ரோப்கார் இயங்கிய சில நிமிடங்களில், மேல்தளத்திலுள்ள இரும்பு பல்சக்கரத்தில் "கியர் ஷாப்ட் சேதமடைந்ததால், காலை 7.50 மணிக்கு ரோப்கார் நடுவழியில் நின்றது.
தவிப்பு: கீழ் தளத்திலிருந்து சென்ற நான்கு பெட்டிகள் 250 அடி உயரத்திலும், மேல் தளத்திலிருந்து வந்த நான்கு பெட்டிகள் 150 அடி உயரத்திலும் தொங்கின. குழந்தைகளுடன் இருந்த பக்தர்கள் அலறினர். ரோப்கார் பராமரிப்பு குழுவினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
2 மணி நேர போராட்டம்: தீயணைப்பு துறையினர், போலீசார், ரோப்கார் பராமரிப்பு குழுவினர், கோயில் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். ரோப்காரில் உள்ள பக்தர்களை, வீலிங் சக்கரத்தை( உருளை சக்கரம்) அயன் ரோப்பில் பொருத்தி, டோலியை கயிற்றுடன் கட்டி, ஒவ்வொரு பக்தராக இறக்குவதென முடிவு செய்யப்பட்டது. இதன்படி ரோப்கார் மெக்கானிக்குகள் சரவணக்குமார், அழகர்சாமி மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரோப்காரில் இருந்த, பக்தர்கள் முதலில் டோலியில் அமர அச்சப்பட்டனர். அவர்களை மீட்பு குழுவினர் சமாதானம் செய்தனர். இதன்பின், ஒவ்வொருவராக இறக்கினர். காலை 8.50 மணிக்கு துவங்கிய மீட்பு பணி 10.50 மணிக்கு முடிந்தது.
ரோப்கார் பழுதாக காரணம் என்ன: பழநி மலைக்கோயில் "ரோப்கார் இயக்கம் துவங்கிய ஓராண்டிலேயே, அதன் செலவுத்தொகையான 4.5 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியது. 2011-2012ல் மட்டும் 3 கோடியே 39 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
விபத்து: 2007ல் ஏற்பட்ட விபத்தில், ரோப்கார் பெட்டிகள் அறுந்து விழுந்ததில் ஆவின் மேலாளர் வடமலையான் உட்பட 4 பேர் பலியாயினர். அதன்பின் இயக்க முறையில் மாற்றம் செய்யப்பட்டது. பாதுகாப்பு கருதி, தற்போது 8 பெட்டிகளில், கீழ் இருந்து செல்லும் நான்கு பெட்டிகளில்16 பேரும், மேல் இருந்து கீழே இறங்கும் நான்கு பெட்டிகளில்13 பேரும், மொத்தம் 29 பேர் பயணம் செய்கின்றனர். தினமும் பகல் 1.30 முதல் 2.30 மணிவரை பராமரிப்பிற்காக ரோப்கார் நிறுத்தப்படும். பராமரிப்பிற்காக மாதம் ஒரு முறையும், ஆண்டுக்கு ஒரு வாரமும் ரோப்கார் இயக்கம் நிறுத்தப்படுகிறது.
தரமில்லாத சீன "அயன் ரோப் (இரும்பு வடக்கயிறு): பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட அயன்ரோப்பில் பெட்டிகள் இணைக்கப்பட்டு, ரோப்கார் இயக்கப்பட்டு வந்தது. அடிக்கடி இக்கயிற்றில் பழுது ஏற்பட்டதால், 2012ம் ஆண்டு பராமரிப்பு பணியின் போது, சீனாவில் தயாரிக்கப்பட்ட "அயன்ரோப் பொருத்தப்பட்டு"ரோப்கார் இயக்கப்பட்டது. அந்த அயன்ரோப்பிலும், ஆறு மாதத்திற்குள் பழுது ஏற்பட்டது. 2013 ஜன.,10ல் நடந்த பராமரிப்புபணியின் போது, கீழ்தளத்தில் உள்ள பெரிய "பேரிங்கில் உதிரிபாகங்கள் பழுதாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக ரோப்கார் இயக்கம் ஒரு மாதம் நிறுத்தப்பட்டது. மும்பையிலிருந்து வாங்கப்பட்ட "புதிய பேரிங் மாற்றப்பட்டு, மீண்டும் இயக்கப்பட்டது. ஏப்., 30ல் பராமரிப்பு பணி நடந்தது. அடுத்த பராமரிப்பு பணிக்கான இந்த வாரத்தில் நடத்த முடிவு செய்திருந்தனர். அதற்குள் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது. ரோப்கார் இதுபோல் மீண்டும் பழுதாகாமல் இருக்க, தேவஸ்தான நிர்வாகமும், ரோப்வே ரிசர்ச் தனியார் நிறுவனமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கையில் உயிர்... மறக்க முடியுமா... : கையில் உயிர்: மீட்கப்பட்ட, போடியைச் சேர்ந்த விஜயகுமாரி கூறுகையில், ""எனது கணவர் குழந்தைகள் உடன் 4 பேர் பழநிக்கு வந்தோம், ரோப்கார் இயங்கிய சில நிமிடங்களில், திடீரென பெட்டிகள் நின்றன. கோயில் பணியாளர்கள் பயப்படவேண்டாம் என அறிவுறுத்தினார். இருந்தாலும், உயிரை கையில் பிடித்தபடியே அமர்ந்திருந்தோம். காலை 9.20 மணிக்கு ரோப்கார் பெட்டியிலிருந்து கீழே இறக்கிவிட்டனர். அதிக வருமானம் உள்ள கோயில் ரோப்கார் பராமரிப்பு பணியில், கோயில் நிர்வாகம் கவனம் செலுத்தவேண்டும்.
மறக்க முடியாது: உடுமலைபேட்டை கோவிந்தராஜூ(ஓய்வுபெற்ற ஆசிரியர்) கூறுகையில், ""பேரன், மனைவி உட்பட 4 பேர் கோயிலுக்கு வந்தோம். 250 அடிக்குமேல் பெட்டியில் தொங்கிய அனுபவம், வாழ்நாளில் மறக்கமுடியாது. கீழே பார்ப்பதற்கு மிகவும் பயமாக இருந்தது. ஒவ்வொருவராக கீழே இறக்கப்பட்டதை பார்த்த பின்னர் தான், நிம்மதி கிடைத்தது. பக்தர்கள் உயிர் பிரச்னையில் இப்படி மெத்தனமாக செயல்படக் கூடாது. இனிவரும் காலங்களில் இவ்வாறு நடக்காத வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தைரியம்: கடைசியாக 10.50 மணிக்கு இறங்கிய, கோயில் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில், ""சுவாமி கும்பிட மலைக்கு சென்றேன். அப்போது எதிர்பாராத விதமாக ரோப்கார் பழுதானது. என்னுடன் இருந்த பக்தர்களுக்கு தைரியம் அளித்தேன். ரோப்கார் பராமரிப்பு குழுவைச் சேர்ந்தவர்கள் தங்கள் உயிரைப்பற்றி கவலைப்படாமல், பக்தர்களை கீழே இறக்கினர்.
கியர் ஷாப்ட் பழுது: ரோப்கார் மெக்கானிக் (பொறுப்பாளர்) அழகர்சாமி கூறுகையில், ""கோல்கட்டாவிலுள்ள ரோப்வே ரிசர்ச் தனியார் நிறுவனம் மூலம் , ரோப்கார் இயக்க முறைகள், அதன் உதிரிபாகங்கள் பற்றி முறையாக பயிற்சிபெற்ற 18 பேர் பணியில் உள்ளோம். தற்போதுள்ள ரோப்கார், மோனோ ஜேக்பாட் தொழிநுட்ப முறையில் இயக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் நிறுவனம் மூலம் ரோப்கார் பராமரிக்கப்படுகிறது. மேல்தளத்திலுள்ள சக்கரத்திலிருந்து சப்தம் கேட்டுள்ளது. கியர் ஷாப்ட் பழுதாகியுள்ளது. ரோப்கார் பழுதிற்கு முழு காரணமும் ஆய்வுக்கு பின் தான் தெரிய வரும், என்றார்.
விரைவில் ஆய்வு: கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில், ""ரோப்கார் மேல்தளத்தில் இயந்திரம் பழுதாகியுள்ளது. "டெக்னிக்கல் பிரச்னை என்பதால் மேலும் இதுபற்றி கூற இயலாது. நடுவழியில் நின்ற பெட்டிகளிலிருந்த, பக்தர்கள் அனைவரும், பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் "வின்ச் மூலம் மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ரோப்கார் கமிட்டியினர் ஆய்வு செய்ய உள்ளனர். அதன்பின் இயக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆனந்த கண்ணீர்: * ரோப்கார் பெட்டியில் தவித்த குழந்தைகள் பசியால் அழுதன. இவர்களுக்கு பிஸ்கட், தண்ணீர், குளுகோஸ் போன்றவை, கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது.
* தகவலறிந்ததும் ரோப்கார் முன்பு ஏராளமான பக்தர்கள் கூடியினர்.
*பெட்டியில் தவித்த இரண்டு குழந்தைகளை மீட்பு குழுவினர் இறக்கும் போது மட்டும், தடுமாற்றம் ஏற்பட்டது. இதை பார்த்த பெற்றோரும், பொதுமக்களும் அலறினர்.
* மீட்கப்பட்டவர்களுக்கு காயம் எதுவும் இல்லை. ரோப்கார் அலுவலக வாசல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
*ரோப்கார் மெக்கானிக்குகள் அழகர்சாமி, சரவணக்குமார் துணிச்சலுடன் பெட்டியில் இருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்களை பத்திரமாக மீட்டனர்.
*நீண்ட நேரம் ரோப்கார் பெட்டியில் தவித்த பக்தர்கள், கீழே இறங்கியுடன், ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
*இணை கமிஷனர் பாஸ்கரன், ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், டி.எஸ்.பி., ஜானகிராமன், கோட்ட தீயணைப்பு அலுவலர் காங்கேயபூபதி கொண்ட குழு மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
என்ன செய்கிறது...ரோப்கார் கமிட்டி... : *பழநி ரோப்கார் பராமரிப்பு உள்ளிட்டபணிகளை கண்காணிக்க 11 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இதில் மின்வாரிய தலைமை பொறியாளர், பழநி கோயில் இணை கமிஷனர், நிர்வாகப்பொறியாளர், ரோப்கார் நிபுணர், மாவட்ட மின்ஆய்வாளர் உள்ளிட்ட 11 பேர் உள்ளனர். இந்த கமிட்டி 2004 ல் அமைக்கப்பட்டது. பெயரளவில் இருந்த கமிட்டி 2007 விபத்திற்கு பின் செயல்படதுவங்கியது. பின் மீண்டும் கமிட்டி கூடுவதில் தொய்வு ஏற்பட்டது.
*திட்ட மதிப்பீடு: 2012 நவ., 29 ல் ரோப்கார் கமிட்டியினர் பழநி கோயிலில் இரண்டாவது ரோப்கார் அமைக்க இடம் தேர்வு செய்தனர். ரூ.20 கோடி திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது. கமிட்டியின் கூட்டம் கடைசியாக 2012 டிசம்பரில் சென்னையில் கூடியது. இதில் இரண்டாவது ரோப்கார் அமைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின் கமிட்டி கூட்டம் நடைபெறவில்லை.
கேள்விக்குறியாகும் இரண்டாவது ரோப்கார் திட்டம்: *பழநியில் ரோப்கார் இயக்கம் துவங்கியவுடன் பக்தர்களின் அமோக வரவேற்பை பெற்றது. 2007 ல் ஏற்பட்ட விபத்து பக்தர்களை உலுக்கியது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் பலியாகினர். இதற்கு அடுத்து பக்தர்கள் தயக்கத்துடன் ரோப்காரை அணுகினர். அச்சம் தெளிந்து மக்கள் தைரியத்துடன் பயணம் செய்தநிலையில், நேற்று நடந்த சம்பவம் மீண்டும் பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
*மாதம் ஒரு முறை பராமரிப்பு என்பது கண்துடைப்பாக நடக்கிறதா, தரமான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
*வருவாயை அள்ளித்தரும் ரோப்கார் பராமரிப்பை, கோயில் நிர்வாகம் அலட்சியம் காட்டாமல் கண்காணிக்க வேண்டும்.
*முறையாக பராமரிப்பது, தரமான பொருட்களை பயன்படுத்துவது, இதை கண்காணிக்க முழுநேர கமிட்டி அமைப்பது என அக்கறையுடன் செயல்பட்டால் விபத்துக்களை தவிர்க்க முடியும்.
*முதல் ரோப்காரை பராமரிப்பதில் சிக்கல் உள்ள நிலையில், இரண்டாவது ரோப்கார் தற்போதைக்கு தேவையா என்ற கேள்வி, பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
காயமில்லாமல் மீட்டது எப்படி: 250 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டிருந்த பெட்டிகளிலிருந்த, பக்தர்களை மீட்பதற்காக, தீயணைப்பு துறையினர் ஏணி உதவியுடன் மெக்கானிக்குகள் அழகர்சாமி, சரவணக்குமார் பெட்டியின் மேல் தளத்திற்கு சென்றனர்.அயன்ரோப்பில், உருளை சக்கரத்தை பொருத்தினர். அதிலிருந்த "டோலி முறையில் கயிறு மூலம் நாற்காலியை கட்டி பக்தர்களை அமரச்செய்து, தீயணைப்பு துறையினர், கோயில் பணியாளர்களின் உதவியுடன், ஒவ்வொரு பக்தர்களாக கீழே இறக்கினர்.250 அடி உயரத்திலிருந்து பக்தர் ஒருவர் கீழே இறக்குவதற்கு அதிகபட்சமாக 20 நிமிடங்கள் வரையானது. பக்தர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.