பதிவு செய்த நாள்
07
ஜூன்
2013
10:06
வத்திராயிருப்பு: சதுரகிரி மலை நடைப்பாதையில் 6 கடைகள் வைப்பதற்கு மட்டுமே, அனுமதி வழங்கிவிட்டு, மற்ற கடைகளுக்கு தடை விதிக்கும் கோயில் நிர்வாகத்தின் முடிவுக்கு, வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சதுரகிரி மலை செல்லும் பக்தர்கள், 7 கி.மீ., தூரம் மலைப்பாதையில் நடந்து,கோயிலை அடைய வேண்டும். திருவிழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்கின்றனர். மற்ற நாட்களில் குறைந்த அளவு பக்தர்கள் செல்கின்றனர். பக்தர்களின் தேவைகளுக்காக, அடிவாரமான தாணிப்பாறையிலிருந்து மலை உச்சி கோயில் வரை ,ஆங்காங்கு வியாபாரிகள் நடைபாதை கடை அமைத்து, நீண்ட காலமாக வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில் குறிப்பிட்ட 6 கடைகளுக்கான ஏலம் விடவே, கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலம் ஜூன் 11 ல் நடைபெற உள்ளது. இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சதுரகிரி அனைத்து வியாபாரிகள் நலச்சங்க செயலாளர் பழனிச்சாமி கூறுகையில், அமாவாசை தினங்களில் லட்ணக்கில் வரும் பக்தர்களுக்கு வெறும் 6 கடைகள் மட்டும் போதுமா? அதிலும் டீ க்கடை, உணவகம் வைக்க அனுமதி இல்லை. அனுமதிக்க உள்ள 6 கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் யார் பொறுப்பு, என்றார்.கோயில் நிர்வாக அதிகாரி குருஜோதி கூறுகையில்,""பக்தர்கள் செல்லும் நடைபாதைகளில் வியாபாரிகள் கடைகள் அமைப்பதால், கோயில் நுழைவுவாயில் படிக்கட்டு உட்பட பல இடங்களில், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. திருவிழா காலங்கள் தவிர, மற்ற நாட்களில் வரும் பக்தர்களுக்கு, 6 கடைகளே போதுமானது. வியாபாரிகள் பெயரில் ஆண்டு முழுவதும், வனப்பகுதிக்குள் கொட்டகை அமைத்துக்கொண்டு, தேவையில்லாமல் பலர் நடமாடுவதால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுகின்றன. மலைக்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதே தெரியவில்லை. கோயில் உள்ள இடம் அடர்ந்த வனப்பகுதி. சாம்பல்நிற அணில் சரணாலயப் பகுதியாகவும் உள்ளது. வனப்பாதுகாப்பு, பக்தர்கள் நலன் கருதி, அறநிலையத்துறை மூலமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,என்றார்.