பதிவு செய்த நாள்
07
ஜூன்
2013
11:06
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ள, ஏகாம்பரேஸ்வரர் கோவில் சொத்துக்களை உடனடியாக மீட்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு நகரில், பழமை வாய்ந்த ஏகாம்பரேஸ்வரர் கோவில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, பெரியமணிக்கார தெரு, ராஜாஜி தெரு, சி.என்., மகாதேவன் தெரு, வ.உ.சி., தெரு, ஜி.எஸ்.டி., சாலை ஆகிய இடங்களில், நிலங்கள் உள்ளன.கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் வரை, காலி மனைகளாக இருந்த இந்த நிலங்களில், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், குத்தகை என்ற பெயரில் எடுத்து, குடியிருப்புகள் மற்றும் கடைகளை கட்டி, அனுபவித்து வருகின்றனர்.பல லட்சம் சுருட்டல்முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் அமைந்துள்ள நிலங்களில், இங்குள்ள அரசியல் பிரமுகர்கள் கோவில் நிர்வாகத்தின் அனுமதியின்றி, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை கட்டி, தனியாருக்கு, பல லட்சம் ரூபாய் முன் வைப்பு தொகை மற்றும் பல ஆயிரம் ரூபாய் வாடகை தொகை வசூலித்து, அனுபவித்து வருகின்றனர். இவர்கள், கோவில் நிர்வாகம் விதித்துள்ள, குறைந்த பட்ச அடிமனை வாடகையை கூட, பல ஆண்டுகளாக செலுத்தாமல் உள்ளனர்.மீட்க வேண்டும்புதிய பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் உள்ள நிலங்களில், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆக்கிரமித்து, கொடி கம்பங்களை வைத்துள்ளனர்.ஆனால், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துக்களை மீட்க, அறநிலையத் துறை அதிகாரிகள், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், பல கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் மாயமாகும் நிலை உள்ளது.