பதிவு செய்த நாள்
08
ஜூன்
2013
10:06
பழநி: பழநியில் நிர்வாகத்திற்குட்பட்ட உபகோயில்களில் 30 கோடி ரூபாய் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. இம்மாதத்தில் கொடைக்கானல் பூம்பாறை குழந்தைவேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான, திருஆவினன் குடி கோயிலில் 90 லட்ச ரூபாய் செலவில், புதிய தரைத்தளங்கள், கோபுரங்களில் வர்ணம் பூசுதல், சுதைகளை சீரமைத்தல் போன்ற பணிகள் நடக்கிறது. இப்பணிகள் 2 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில், பூம்பாறை குழந்தை வேலப்பவர் கோயில் ஆகிய இடங்களில் தலா 60 லட்ச ரூபாய் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. விரைவில் பெரியநாயகியம்மன் கோயில், பெரியஆவுடையார் கோயில், பாலசமுத்திரம் பெருமாள் கோயில் ஆகியவற்றில், தலா 80 லட்ச ரூபாய் செலவில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெறவுள்ளது. 30 கோடி ரூபாய் செலவில், 45 வகையான திருப்பணிகள் மேற்கண்ட கோயில்களில் நடக்கிறது.
கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,""30 கோடி ரூபாய் செலவில் உபகோயில்களில் குடமுழுக்கு திருப்பணிகள் நடக்கிறது. முதலில்(இம்மாதத்தில்) பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. செப்டம்பரில் திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. தலா 80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பாலசமுத்திரம், பெரியாவுடையார் கோயில், பெரியநாயகியம்மன்கோயில் ஆகியவற்றில் கும்பாபிஷேகப் பணிகள் துவங்கயுள்ளோம் என்றார்.