பதிவு செய்த நாள்
08
ஜூன்
2013
10:06
திருப்பதி: திருமலை ஏழுமலையானை நேற்று காலை, முக்கிய அரசியல் பிரமுகர்கள், தங்கள் குடும்பத்துடன் வழிபட்டனர். ஆந்திர கவர்னர் நரசிம்மன், தன் குடும்பத்தினருடனும், பஞ்சாப் கவர்னர் சிவராஜ் பாட்டீல், தன் குடும்பத்தினருடனும், சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங்கும், ஏழுமலையானை வழிபட்டனர். மூவரும் ஏழுமலையான் அபிஷேக சேவையில் பங்கேற்றனர். அவர்களுக்கு, ரங்கநாயகர் மண்டபத்தில், ஏழுமலையான் படமும், சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
பின் வெளியே வந்த, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், நிருபர்களிடம் கூறியதாவது: சத்தீஸ்கரில் நடந்த மாவோயிஸ்ட்களின் தாக்குதல், நாட்டில் வேறு எங்கும் நடைபெறக் கூடாது; அச்சம்பவத்திற்குப் பிறகு, சத்தீஸ்கர் மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என, ஏழுமலையானை வேண்டிக்கொள்ள வந்தேன். சத்தீஸ்கர் மாநில பாதுகாப்பு பணிகளில், பல உயர் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். மாவோயிஸ்ட்கள் தாக்குதல் குறித்து, உயர்மட்ட அளவில் விசாரணை நடக்கிறது. இவ்வாறு ராமன் சிங் கூறினார்.
உண்டியல் வருமானம்: திருமலை ஏழுமலையானுக்கு வியாழக்கிழமை இரவு வரை, 2.32 கோடி ரூபாய், உண்டியல் காணிக்கை மூலம் கிடைத்துள்ளது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.