பதிவு செய்த நாள்
08
ஜூன்
2013
10:06
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் நாளை (9ம் தேதி) நடக்கிறது. சத்தியமங்கலம் அடுத்த கே.என்.பாளையம், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருமண தடை நீங்கும் சுயம்வரா பார்வதி யாகம் நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான யாகம் நாளை காலை ஆறு மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, முருகப்பெருமான் ஹோமம், நவகிரஹ ஹோமம், அம்மன் அழைப்பு, குலதெய்வம் அழைப்பு, முன்னோர்கள் அழைப்பு பூஜை நடக்கிறது. பின், திருமண தடை நீங்கும் பார்வதி யாகம் துவங்கும். இதில் நவகிரஹ தோஷ நிவர்த்தி, மாங்கல்ய தோஷ நிவர்த்தி, களஸ்த்ர தோஷ நிவர்த்தி, செவ்வாய் தோஷ நிவர்த்தி, ருது தோஷ நிவர்த்தி, நாகதோஷ நிவர்த்தி, முன்னோர்கள் தோஷ நிவர்த்திக்கு சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகிறது. யாக குண்டத்துக்கு திருமணம் ஆகாத ஆண்கள் வாழை மரத்துக்கு மாலை அணிவித்து, களஸ்த்ர தோஷ நிவர்த்தியும், பெண்கள் பால மரத்துக்கு மாலை அணிவித்து மாங்கல்ய தோஷ நிவர்த்தியும் செய்தும் தொட்டாச்சிணுங்கி, கருந்துளசி செடிகளுக்கு மஞ்சள், குங்குமமிட்டு வணங்கி திருமண தடைக்கு பரிகாரம் மேற்கொள்கின்றனர். இந்த யாகத்தில் கலந்து கொள்ள கட்டணம் இல்லை. யாக பூஜைக்கு வருவோர் தேங்காய், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களோடு, விடுபூக்கள் ஒரு படி மற்றும் கட்டிய சரம் பூ ஒரு முழம், இவற்றுடன் ஒரு எலுமிச்சை பழம் கொண்டு வர வேண்டும் என விழா ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தெரிவித்தார். இந்த யாகத்தில் கலந்துகொள்ள முன்பதிவு செய்பவர்கள், 04285-133161 என்ற தொலைபேசி எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.