பதிவு செய்த நாள்
10
ஜூன்
2013
11:06
திருக்கழுக்குன்றம்: தாழம்பேடு கைலாசநாதர் கோவிலை பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாழம்பேடு கிராமத்தில், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. கருவறையில் கிழக்கு நோக்கி கைலாசநாதர் காட்சியளிக்கிறார். திரிபுரசுந்தரி அம்மன் தெற்கு நோக்கி காட்சிஅளிக்கிறார். 12 தூண்கள் கொண்ட அர்த்தமண்டம் உள்ளது. கோவில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோவில் எதிரே நந்தி சிலை உள்ளது. ஐம்பொன்களாலான உற்சவர் சிலையும் உள்ளது.கோவில் பிரகார சுவரில், விநாயகர், முருகர், கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். பிரதோஷம், சிவராத்திரி, சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. கோவிலுக்கு, 2 ஏக்கர் நிலம் உள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், தற்போது பராமரிப்பில்லாமல் காணப்படுகிறது. சுற்றுச்சுவர்கள் இல்லாததால், கோவில் வளாகத்தில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. கடந்த, 75 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்த இக்கோவிலை பராமரித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.