பதிவு செய்த நாள்
11
ஜூன்
2013
10:06
நம்பியாண்டார் நம்பி திருநாரையூரில் பிறந்து சைவத் திருமுறைகளைத் தொகுத்ததோடு பல நூல்களையும் இயற்றியுள்ளார். 10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின் போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி பதினொரு திருமுறைகளாகத் தொகுத்தார். 11ஆம் திருமுறையில் தாம் இயற்றிய பத்து பிரபந்தங்களையும் இணைத்து வகைப்படுத்திய நம்பி பாடியவை, திரு இரட்டை மணிமாலை, கோயில் திருபண்ணியர் விருத்தம், திருத்தொண்டர் திரு அந்தாதி, ஆளுடைப் பிள்ளையார் திருவந்தாதி, திரு சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திரு உலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை, திருநாவுக்கரசர் திரு ஏகாதச மாலை ஆகியனவாகும்.
உலகெங்கும் உள்ள சிவாலயங்களில், இன்று தேவாரம் ஒலிக்கக் காரணமாக இருப்பவர், நம்பியாண்டார் நம்பி. இங்குள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும்,பொல்லாப்பிள்ளையார் பிரசித்தி பெற்றவர். பொல்லாதவர் என்பது இதன் பொருளல்ல.பொள்ளா என்றால், தானாகத் தோன்றுதல்! அதாவது, சிற்பிகளால் செதுக்கப்படாமல், சுயம்புவாகவே தோன்றியவர் இவர். பொள்ளாப்பிள்ளையார் என்பதே,பொல்லா என திரிந்து விட்டது. இந்தப் பிள்ளையார், ஒரே ஒரு பக்தனின் சொல்லுக்கு மட்டும் தான் கட்டுப்படுவார். அவர், இவருக்கு பூஜை செய்பவர். பெயர் நம்பியாண்டார் நம்பி. நம்பி என்றால் தலைவன். எல்லாரும் இறைவனால் ஆட்கொள்ளப்பட வேண்டும் என்று எண்ணுவர். ஆனால், நம்பியோ, இறைவனையே ஆட்கொண்டு,நம்பியாண்டார் நம்பி ஆனார்.
இவரது தந்தை தான் பொல்லாப்பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்வார். ஒருமுறை, வெளியூர் செல்ல நேர்ந்ததால், மகனை அழைத்து, நம்பி, இன்று நீ பிள்ளையாருக்கு நைவேத்யம் செய்… என்றார்.பிள்ளையார் சாப்பிடுவாரா? என்று அந்த பிஞ்சுமகன் கேட்டார்.விளையாட்டு பிள்ளை, தெரியாமல் கேட்கிறான்… என நினைத்தவர், ஆம் என சொல்லி சென்று விட்டார். குழந்தை நம்பி, பிள்ளையாருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்தார்.தும்பியே! சாப்பிடு… என்றார். பிள்ளையார் சாப்பிடுவதாகத் தெரியவில்லை. நீண்டநேரம் போராடினார். அவர் சாப்பிடாததால்,நீ சாப்பிடாவிட்டால் நான் இறப்பேன்… எனச் சொல்லி, கருவறைச் சுவரில் தலையை மோதினார். கருணையுள்ள பிள்ளையார், அதற்கு மேல் சோதிக்காமல், சாப்பிட ஆரம்பித்தார். மகிழ்ந்தார் நம்பி. ஊரார் இதை நம்ப மறுக்கவே, அவர்கள் முன்னிலையிலும், இந்த அதிசயம் நிகழச் செய்தார்.