மகாபாரதம் சல்யபர்வத்தில், கிருஷ்ணரின் சகோதரரான பலராமர் மூலம் முருகனின் வரலாறு கூறப்படுகிறது. தாரகாசுரனை முருகன் வதம் செய்ததையும், அவருக்கு தேவசேனாதிபதி என்ற பட்டம் சூட்டியதையும் அவர் பாண்டவர்களுக்கு எடுத்துரைக்கிறார். சரஸ்வதி நதி தீரத்தில் பிரம்மா, முருகனுக்கு பட்டாபிஷேம் செய்த போது சிவன், பார்வதி, அக்னி, கங்காதேவி, தேவர்கள் முருகனை வாழ்த்தினர். அப்போது முருகன் பல வடிவங்களில் வெளிப்பட்டார். கந்தனாக சிவபெருமானிடமும், விசாகனாக பார்வதியிடமும், சகனாக அக்னியிடமும், நைகமேசனாக கங்கையிடமும் ஆசி பெற்றார். மகேஸ்வரனின் மைந்தனா, அக்னி புத்திரனா, உமையின் மகனா, கங்கையின் பிள்ளையா, மகாபலம் பொருந்திய இவன் ஒருவனா... இல்லை நூறுபேரா? இல்லை ஆயிரம் பேரா? என மகாபாரதம், முருகனின் பலத்தை அளவிட வார்த்தையில்லாமல் தவிக்கிறது. மஹாபலம் யோகீனாமீஸ்வரம் தேவம் சததா ச சஹஸ்ரதா? என்பதே அந்த ஸ்லோகம்.