பதிவு செய்த நாள்
21
ஜூன்
2013
10:06
பழநி: பழநி மலைக்கோயிலில் சுற்றித்திரியும் குரங்குகளால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர். பழநி மலைக்கோயிலின் வெளிப்பிரகாரம், "ரோப்கார், வின்ச் ஸ்டேஷன் பகுதிகளில் ஏராளமான குரங்குகள் உள்ளன. பக்தர்களிடமிருந்து, பிரசாதப்பை, பணப்பை, தேங்காய், மொபைல், பஞ்சாமிர்தம், பழங்கள் உட்பட அவர்கள் கையில் வைத்துள்ள எதுவாக இருந்தாலும் இவைகள் பறித்து செல்கின்றன. பக்தர்கள் வெளிப்பிரகாரத்தை வலம் வரும்போது, குரங்குகள் அவர்களை சூழ்ந்துகொள்கின்றன. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. குரங்குகளை பிடிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்கள் கோரிக்கை. முருகேசன்(பாலக்காடு): குடும்பத்துடன் பழநிக்கு வந்தோம், மலைக்கோயிலில் குரங்குகளை கண்டால் மிகவும் பயமாக உள்ளது. பிரசாதத்தை மறைத்து வைத்து கீழே கொண்டுவர வேண்டியுள்ளது. காந்திராஜ்(நாமக்கல்): குடும்பத்துடன் பழநிகோயிலுக்கு வந்தோம், வந்த இடத்தில் பூஜை செய்வதற்காக வைத்திருந்த தேங்காய், வாழைப்பழத்தை குரங்குகள் பறித்துசென்றது. வருத்தமாக உள்ளது. குரங்குகளை கட்டுபடுத்த கோயில்நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" மலைக்கோயிலில் குரங்குகளின் தொந்தரவு உள்ளது. அவற்றை செக்யூரிட்டிகள் விரட்டுகின்றனர். குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
உலகநலன், மழை வேண்டி அன்னாபிஷேகம்: பழநி மலைக்கோயிலில், உலக நலன், அமைதி, மழை வேண்டி (ஜூன் 22ல்) அன்னாபிஷேகம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து திருஆவினன்குடி,பெரியநாயகியம்மன், பெரியாவுடையார் ஆகிய கோயில்களில் அன்னாபிஷேகம் நடக்கிறது. பழநி மலைக்கோயிலில் நாளை (ஜூன் 22-ல்) அன்னாபிஷேகத்தை யொட்டி பாரவேல் மண்டபத்தில் சங்கு பூஜை நடக்கிறது. பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் சங்குகளில் நிரப்பப்படும். தங்கச்சப்பரத்தில் கலசங்கள் வைத்து, சிறப்பு அர்ச்சனை பூஜைகள் நடக்கிறது. உச்சிக்காலத்தில் மூலவருக்கு சங்காபிஷேகம் நடத்தப்பட்டு, மூலவரின் சிரசில் அன்னம் கிரீடமாக சூட்டப்படும், வில்வம் கலந்த சுத்த அன்னம் பாதங்களில் படைக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனை, தீபாராதனை நடைபெறும். ஜூன் 23-ல் திருஆவினன்குடி கோயிலில் மாலை 5.30 மணிக்கு மேல்(சாயரட்சையில்) அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 24-ல் பெரியநாயகியம்மன் கோயிலில் சாயரட்சையில் பெரியநாயகியம்மன், சிவன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 25-ல் சண்முக நதிக்கரையிலுள்ள, மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ள, பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடக்கிறது. சிவனுக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யபட்டு. சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பழநி கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணைக்கமிஷனர் ராஜமாணிக்கம் செய்து வருகின்றனர்.