பதிவு செய்த நாள்
21
ஜூன்
2013
04:06
சற்றுநேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த பரதனின் முன்னால் சுமந்திரரும் மற்ற அமைச்சர்களும் நின்றார்கள். அன்புக்குரியவர்களே! நான் சொல்லும் உண்மையைக் கேளுங்கள். எக்காலத்திலும் நான் ராஜ்யத்திற்கு ஆசைப்பட்டவன் அல்ல. நான் வெளியூரில் இருந்ததை நீங்கள் அறிவீர்கள். இதோ நிற்கிறாளே! இவளோடு சேர்ந்து சதி செய்யவுமில்லை. அண்ணன்மாரை தந்தையார் காட்டிற்கு அனுப்பிய விஷயமும் இங்கு வந்த பின் தான் தெரியும், என்று புலம்பினான். இரவு நேரத்தில் அவனது அலறல் அருகிலுள்ள அறையில் இருந்த கவுசல்யாதேவியின் காதில் விழுந்தது. அவள் சுமித்திரையிடம், பரத, சத்ருக்கனர் வந்து விட்டார்கள் போலும்! வா, அவர்களைப் பார்த்து வருவோம். குழந்தைகள் மிகவும் வருத்தத்தில் இருப்பார்கள், என்றார் தனக்கே உரிய நல்ல சுபாவத்துடன். அதற்குள் பரத சத்ருக்கனரே அங்கு வந்து விட்டனர்.
அம்மா, எனக்கதறி காலில் விழுந்தான் பரதன். இந்நேரத்தில் சற்றே உணர்ச்சிவசப்பட்ட கவுசல்யா, பரதா! உன் எண்ணம் நிறைவேறி விட்டதல்லவா? உன் தாய் அளப்பரிய சொத்துக்களை உனக்கு உரிமையாக்கி விட்டாள் அல்லவா? வைத்துக் கொள், இப்போது என்னிடம் எதுவுமே இல்லை.
ஒன்றுமில்லாத என்னை, இந்நாட்டின் பிரஜை என்ற முறையில், என் ராமனிடம் கொண்டு சேர்த்து விடு. இதை மட்டுமாவது செய்வாயா? என்றாள் கண்ணீர் பெருக்கி. பரதன் அதிர்ந்தான். தாயே! தாங்களுமா என்னைச் சந்தேகப்படுகிறீர்கள். இந்த நாடு வேண்டுமென்று கருதி என் தாயோடு சேர்ந்து நான் சதி செய்திருந்தால், என் அண்ணனுக்கு துரோகம் செய்திருந்தால் நான் இதுநாள் வரை படித்த அனைத்து வித்தைகளும் எனக்கு பயன்படாமல் போகட்டும். தற்கொலை செய்பவன், வேலைக்காரனுக்கு கூலி கொடுக்காத அயோக்கியன், எதிரிகளுக்கு பயந்து ஓடுபவன், புரோகிதர்களுக்கு தட்சணை கொடுக்காமல் ஏமாற்றுபவன் ஆகியோருக்கு கிடைக்கும் கதி எனக்கு கிடைக்கட்டும். என் மனைவி கூட என் சொல் கேளாமல் போகட்டும். கோள் சொல்லி பிழைப்பவன் என்ன கதி அடைவானோ, அவனைப் போல் நான் நாசமாய் போகக் கடவேன், என தன்னைத் தானே நிந்தித்துக் கொண்டான். கவுசல்யா இப்போது தான் சுதாரித்தாள். மகனே! கணவரையும், மகனையும் ஒரு சேர இழந்த துக்கத்தில் இப்படி பேசி விட்டேனடா! வருத்தம் கொள்ளாதே. லட்சுமணனைப் போலவே உனக்கும் ராமனிடம் மிகுந்த மரியாதை உண்டு என்பதை நான் அறிவேன், என்று ஆறுதல் சொல்லி, அவனை மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். இரவு முழுக்க இருவரும் பழைய கதைகளைப் பேசி அழுது கொண்டிருந்தனர். பொழுது விடிந்ததும் வசிஷ்டர் வந்தார்.
பரதா! இப்படியே அழுது கொண்டிருந்தால் எந்தக் காரியம் தான் நடக்கும்? நடப்பதைப் பார். மகாராஜாவின் உத்தரகிரியைக்கு ஏற்பாடு செய்தாயிற்று. நீ வந்து ஆக வேண்டியதைப் பார், என மெதுவாய் சொன்னார். பரதனும் தன்னைத் தேற்றிக் கொண்டு எழுந்தான். எண்ணெய் கொப்பரையில் வைக்கப்பட்டிருந்த மகாராஜாவின் உடல் வெளியே எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அறுபதாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த அந்த மாமன்னரின் உடல் பல்லக்கில் ஏற்றப்பட்டது. பரதன் தந்தையின் உடலைப் பார்த்துக் கதறினான். இந்த உலகத்திற்கே வழிகாட்டியாய் இருக்கும் ராமன் காட்டிற்கு போய் விட்டார். இந்நிலையில் நீங்களும் போய் விட்டீர்கள். இனி இந்த நாட்டை யார் காப்பாற்றுவார்கள்? சந்திரன் இல்லாத வானம் போல் இந்த அயோத்தியை இருளில் மூழ்கடித்து விட்டீர்களே? என புலம்பினான். தசரதரின் இறுதியாத்திரை துவங்கியது. பல்லக்கிற்கு முன்னால் தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட பூக்களை வாரி இறைத்துக் கொண்டு சிலர் சென்றனர். சிலர் பல அங்க வஸ்திரங்களை வீசிக் கொண்டே சென்றனர்.
தங்க பாத்திரத்தில், சந்தனம், அகில், குங்குலியம் முதலிய திரவியங்களின் புகை கமழும்படி சிலர் எடுத்துச் சென்றனர். தசரதரின் மனைவியர் 350 பேரும் பல்லக்கில் ஏறி, கணவனை இழந்த பெண்கள் புடைசூழ வந்து கொண்டிருந்தனர். முடி சார்ந்த மன்னரும் பிடி சாம்பலாகும் மேடையில் தசரதரின் உடல் வைக்கப்பட்டது. சாமவேத மந்திரத்தை வேதியர்கள் ஒலித்தனர். பரதனும், மற்ற பத்தினிகளும் சிதையை சுற்றி வந்தனர். பரதன் சிதையில் அக்னியை மூட்ட, மகாராஜா தசரதரின் உடல் பஸ்பமாகத் துவங்கியது. 350 ராஜபத்தினிகளும் வாய்விட்டுக் கதறிய ஒலி நெடுந்தூரம் கேட்டது. இந்த தேசத்திற்கு ராமன் என்ற பெரும் சொத்தைத் தந்த மகாராஜா தசரதரின் சரித்திரம் இத்துடன் நிறைவடைந்தது. பின்னர் அனைவரும் அயோத்தி மாநகரில் ஓடும் சரயூ நதியில் நீராடி, அரண்மனை திரும்பினர். பத்து நாட்கள் தரையில் ஒரு துணி கூட விரிக்காமல் படுத்து விரதம் இருந்தனர். அக்காலத்தில் யாராவது இறந்தால், இப்படி விரதம் அனுஷ்டிப்பது வழக்கம். பதினோராம் நாள் புண்ணியாஹவாசனம் என்ற சடங்கும், 12ம் நாள் சில சடங்குகளும் நடத்தப்பட்டன. 13ம் நாள் தான் அக்காலத்தில் அஸ்தி கரைக்கப்பட்டிருக்கிறது. அன்று புரோகிதர்களுக்கு பரதன் ஆடு மாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள், வீடு, வஸ்திரம் என பல்வகை தானங்களைச் செய்தான்.
பின்னர் மயான மேடைக்கு சென்றான். சாம்பலும், எலும்புகளும் மட்டுமே மிஞ்சிக்கிடந்தது. அதைப் பார்த்து கதறினான். சத்ருக்கனன் மயங்கியே விட்டான். மயக்கம் தெளிந்து எழுந்து, தந்தையார் தனக்கு இளமையில் வாங்கித்தந்த பரிசுகள், அவனோடு விளையாடியதை எல்லாம் சொல்லிச் சொல்லி அழுதான். வசிஷ்டர் அவர்கள் அருகே வந்தார். குழந்தைகளே! என்ன இதெல்லாம்? உலகில் பிறக்கும் எல்லா ஜீவன்களும், பசி, தாகம், சோகம், மோகம், முதுமை, மரணம் ஆகியவற்றை அனுபவித்தே ஆக வேண்டும். எல்லாருக்கும் உரிய நிகழ்வுதானே உங்கள் தந்தையாருக்கும் நிகழ்ந்தது, என சமாதானப்படுத்தினார். பரத, சத்ருக்கனர் அஸ்தியைக் கரைத்து விட்டு, இல்லம் திரும்பினர். எல்லாம் முடிந்தது என தெரிந்ததும், பரதனுக்கு பட்டாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்படும் என நினைத்துக் கொண்ட மந்தரை எனப்படும் கூனி அரண்மனைக்கு புறப்பட்டாள். சாதராணமாகவா? ராஜமாதாக்கள் அணியும் விலை உயர்ந்த வஸ்திரங்களை அணிந்து கொண்டாள். எல்லாம் கைகேயியிடம் வாங்கிய பிச்சை தான். உடலெங்கும் முத்து மாலைகள் ஜொலித்தன. சந்தனம் கமகமத்தது. ஒரு கிழவி தன்னை இப்படி அலங்கரித்தது எப்படி இருந்தது தெரியுமா? குரங்கைப் போல இருந்தது என்கிறார் வால்மீகி. அந்த கிழக்குரங்கு தன் அதிகாரத்தை இனி அயோத்திவாசிகளிடம் காட்டலாம் என்ற மமதையுடன் கைகேயியின் அறைக்கதவை தட்டியது.