பதிவு செய்த நாள்
21
ஜூன்
2013
04:06
மந்தரையைப் பார்த்தார்களோ இல்லையோ...இத்தனை நிகழ்வுளுக்கும் காரணமாக இருந்து விட்டு, அரண்மனைக்குள்ளும் நுழைந்த அவளை காவலர்கள் குண்டு கட்டாகத் தூக்கினர். கிழக்குரங்கே! உன்னால் தானேடி இவ்வளவு வினையும். மகாராஜாவையே கொன்று, ராமபிரானை காட்டுக்கு அனுப்பிய துரோகியாகி விட்டாயே! நல்லவளான கைகேயியை ஒரே நாளில் உன்னைப் போலவே மாற்றிய சதிகாரியே! வா, எங்களோடு, பரதன் வந்து விட்டார். அவரிடம் கொண்டு போய் உன்னை விடுகிறோம். உன்னைப் பார்த்த மாத்திரத்திலேயே வெட்டி வீழ்த்தி விடுவார், என்றவர்களாய், அவளை தரதரவென இழுத்துக் கொண்டு சென்றனர். பலரது பிடியில் அகப்பட்ட அவள் ஓலமிட்டாள். எதிரே, சத்ருக்கனன் வந்து கொண்டிருந்தான். ராமாயண காவியத்தில் ராமனுக்கு கூட கோபம் பலமுறை வெளிப்பட்டிருக்கிறது. மற்ற எல்லா பாத்திரங்களுமே கோபத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். சத்ருக்கனன் மட்டும் கோபப்பட்டதாக வரலாறு இல்லை. அப்படிப்பட்ட சத்ருக்கனன் இந்த ஒரே ஒரு இடத்தில் மட்டும் கடுமையாய் கோபப்படுகிறான். மந்தரையை, அவன் முன்னால் காவலர்கள் நிறுத்தினர். அவளைப் பார்த்ததும் அந்த சாந்தசீலன் ஆத்திரமடைந்தான். முகம் சிவந்து விட்டது. எங்கள் குடும்ப விளக்கை அணைத்த கொலைகாரியே! உன்னை என்ன செய்தாலும் தகுமடி.
நீ உயிரோடு இருக்கவே கூடாது, என்றவனாய் தரையில் அங்குமிங்குமாக இழுத்தான். வலி தாங்காத அந்தக் கிழவி அலறினாள். அவளது ஆடைகள் கலைந்தன. நகைகள் அந்த அறை முழுக்க சிதறின. அவை வானத்தில் உதித்த நட்சத்திரங்கள் போல் ஜொலித்தன. ஒருவரை அடிக்கும் போது அவரது ஆடைகள் கலைவதும், கல் நகைகள் அணிந்திருந்தால் அவை உடைந்து போவதும் வாடிக்கையானது தான். ஆனாலும், எதற்காக வால்மீகி நகைகள் சிதறியதை இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்கிறார் தெரியுமா? பளபளக்கும் நகைகளுக்காகவும், இதர செல்வங்களுக்காகவும் ஆசைப்பட்டு தான் நல்லவர்களைக் கூட சிலர் கெடுக்கிறார்கள். அப்படி கெடுப்பவர்கள், என்றாவது ஒருநாள் தண்டனை அடைந்தே தீருவார்கள். அப்போது அந்த நகையும், பணமும் அவர்களைக் காப்பாற்றா துணை வராது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, பிறர் வாழ்வை கெடுக்கக்கூடாது என்பதைக் காட்டத்தான். மந்தரை அலறினாள். ஐயோ! கைகேயி, சத்ருக்கனன் என்னை அடிக்கிறான். சுற்றி நிற்கும் பாவிகளெல்லாம் என்னைக் கொன்று விடுவார்கள் போல் இருக்கிறது. என்னைக் காப்பாற்று...காப்பாற்று, என அரண்மனையே அதிரும் வண்ணம் அலறித் துடித்தாள். கோபத்தை வென்ற சத்ருக்கனரையே கோபப்பட வைத்து விட்டாள் என்றால், இவள் கதை இன்றோடு முடிந்தது, என பயந்து போன அரண்மனைப் பணிப்பெண்கள், பயத்தில் ஒடுங்கி நின்றனர்.
அவளது அபயக்குரல் கேட்டு ஓடிவந்த கைகேயி அங்கே வந்தாள். அவளைப் பார்த்ததும் சத்ருக்கனனின் கோபம் இன்னும் அதிகமாயிற்று. மந்தரைக்கு அடி பலமாக விழுந்தது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பழமொழி இங்கே நிறைவேறிக் கொண்டிருந்தது. சத்ருக்கனனின் கோபத்தைப் பார்த்து அதிர்ந்து போன கைகேயி, அவன் அருகிலேயே வரவில்லை. நேராக மகன் பரதனிடம் ஓடினாள். பரதா! மந்தரையை சத்ருக்கனன் இம்சை செய்கிறான். அவளைக் காப்பாற்று, என்றாள். பரதன் வேகமாக வந்தான். மந்தரையை அடிப்பதை நிறுத்தச் சொன்னான். சத்ருக்கனா! குழந்தையுள்ளம் கொண்ட உன்னிடமா இவ்வளவு கோபம் புதைந்து கிடந்தது. நீ கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அதிலும் ஒரு பெண் மீதா உன் கோபம் திரும்பியது. இந்த உலகத்தில் பிறந்த சகல ஜீவராசிகளிலும் மென்மையான ஜீவர்கள் பெண்கள் தான். குணத்தில் கெட்டவர்களாகவும், பாதகிகளாகவும் சில பெண்கள் இருப்பினும், அவர்கள் மீது கைவைத்து விட்டால், எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லாமல் போய் விடுவார்கள். எனவே, எதிர்க்கத் தைரியமில்லாத அந்தப் பெண்ணை விட்டுவிடு. இவளை மட்டுமல்ல, இவள் சொல் கேட்ட என் தாய் கைகேயியையும் சேர்த்துக் கொன்றாலும் பாவமில்லை தான். ஆனாலும் ஏ பரதா! என் தாய் கைகேயியைக் கொல்ல நீ யாரடா? என நம் அண்ணன் ராமச்சந்திர மூர்த்தி என்னிடம் கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்.
அது மட்டுமா? அக்கணமே, என் முகத்தில் விழிக்காதே, போ என அந்த மகானுபாவன் விரட்டி விடுவாரே. அந்த ஒரே காரணத்திற்காகத் தான் இவர்கள் இருவரையும் கொல்லாமல் விட்டு வைத்திருக்கிறேன். இந்த துஷ்டையை நீ கொன்றால், ராமன் நம்மிடம் பேசக்கூட மாட்டார், என்றான். ராம நாமத்தின் பெருமை இவ்விடத்தில் வெளிப்பட்டது. கெட்டவன் ஒருவன் அவஸ்தைப்படும் போது கூட ராமா என அவ்விடத்தில் யாரோ ஒருவர் நின்று சொன்னால் போதும். அந்த மகா கெட்டவனுக்கும் விடுதலை கிடைத்து விடும். மந்தரை ஒரு நாட்டின் அழிவுக்கே காரணமாக இருந்தவள் என்றாலும் கூட, ராமா என்ற சொல் கேட்டதும் அவள் விடுவிக்கப்பட்டு விட்டாள். பரதன் ராமனின் பெயரால் மந்தரையை விடச் சொன்ன பிறகு தான், கோபத்தைக் குறைத்துக் கொண்டு, அவளை ஒரே தள்ளாக தள்ளிவிட்டான். அந்த வேகத்தில் அவள் கைகேயியின் காலில் போய் விழுந்தாள். அழுது தீர்த்தாள். கைகேயி அவளை தன்னால் ஆன மட்டும் சமாதானம் செய்தாள். ஒருவாறாக தசரதர் இறந்து 14 நாட்கள் கடந்து விட்டன. அயோத்தி அரசன் இல்லாமல் தத்தளித்துக்கொண்டிருப்பதை அமைச்சர்களும், சேனாதிபதிகளும் கவனித்தனர். பரதனிடம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி வலியுறுத்தினர்.
தர்மம் தவறாத பரதன் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டான். தனது நிலையில் அவன் உறுதியாக இருந்தான். எங்கள் குல வழக்கப்படி குடும்பத்தில் மூத்தவனே ராஜ்யம் ஆள வேண்டும். அதன்படி என் அண்ணன் ராமனே பதவி பொறுப்பேற்க வேண்டும். நான் அவரை அழைப்பதற்காக காட்டிற்கு போகிறேன். அவரை வலுக்கட்டாயமாகவேனும் அழைத்து வருவேன். நான் காட்டிற்கு புறப்படுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுங்கள், என்றான். இதைக்கேட்ட அயோத்தி நகர மக்கள் மனம் குதூகலித்தனர். ராம ராஜ்யம் ஏற்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் பரதனை பாராட்டினர். உனக்கு லட்சுமி கடாட்சம் என்றும் குறையாமல் இருக்கட்டும் என வாழ்த்தினர். ஒருவன் நாடு வேண்டாமென சொல்கிறான். நாடாளுவதால் கிடைக்கும் சுகம் வேண்டாம் என்கிறான். நாடாண்டால் கிடைக்கும் செல்வத்தை வேண்டாம் என்கிறான். உலகத்தையே தன்னுள் அடக்கும் சக்தி மிக்கவனாகலாம். ஆனாலும், பரதன் இத்தனையும் வேண்டாம் என்கிறான். அதாவது, தன்னைத் தேடி வருகின்ற லட்சுமியை உதறித்தள்ளுகிறான் என்றுதான் சாதாரணமானவர்களின் மனம் எண்ணும். ஆனால், மக்களோ அவனுக்கு, லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கட்டும் என்று வாழ்த்துகிறார்கள்.
இது முரண்பாடாக தெரிகிறதே என யோசிக்கலாம். இதன் பொருள் என்னவென்றால், அடுத்தவனுக்கு கிடைக்க வேண்டிய பொருளை எவன் ஒருவன் அபகரிக்காமல் அவனிடமே கொடுக்கவேண்டுமென கருதுகிறானோ, அவனை லட்சுமி தேவி என்றும் பிரியமாட்டாள் என்பதாகும். பரதன் இவ்வாறு சொன்னதும் வசிஷ்டரும் மற்ற சேனாதிபதிகளும், ஒருவேளை ராமபிரான் வரமறுத்துவிட்டால் நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வீர்களா? எனக்கேட்டனர். என் அண்ணன் இங்கு வரமறுத்துவிட்டால், அவரது ராஜ்யத்தை பாதுகாப்பேனே தவிர, ஒருக்காலும் பதவியில் அமரவேமாட்டேன், என உறுதியாக சொல்லிவிட்டான். வசிஷ்டர் அவனைப் பதவியேற்கச் சொல்லி மிகவும் வற்புறுத்தினார். குரு என்றும் பாராமல், இன்னொருவருக்கு கிடைக்க வேண்டியதைப் பறித்துக் கொள் என்று உபதேசிக்கும் குரு எங்கள் நாட்டிற்கு கிடைத்திருக்கிறார் என்றால், இந்த நாடு இன்னும் மிகுந்த ÷க்ஷமத்துடன் இருக்கும் இல்லையா? என வஞ்சப்புகழ்ச்சி அணியில் பேசினான். எல்லாரும் அந்த நல்லவனை தெய்வமாய் எண்ணி மனதார பூஜித்தனர். —தொடரும்