பதிவு செய்த நாள்
22
ஜூன்
2013
10:06
ஊத்துக்கோட்டை:சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், மழை பொழிய வேண்டி ஸ்ரீருத்ர ஹோமம் நடந்தது.ஊத்துக்கோட்டையில் இருந்து, 1 கி.மீ., தொலைவில் அமைந்து உள்ளது சுருட்டப்பள்ளி கிராமம். இக்கிராமத்தில், சிவபெருமான் உலகை காக்க விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதி தேவியின் மடி மீது தலைவைத்து படுத்தவாறு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ விழா தோன்ற காரணமான கோவில் என, இக்கோவில் கூறப்படுகிறது.சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோவிலில், கடந்த, 5 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. ஜூன், 21, 5 ஆண்டுகள் நிறைவடைந்து, 6ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. மேலும், மழை பெய்ய வேண்டி கோவில் வளாகத்தில் ஸ்ரீருத்ர ஹோமமும் நடந்தது. சிவாச்சாரியார்கள் கலசம் வைத்து, யாகசாலை அமைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதில், கோவில் அறங்காவல் குழு தலைவர் மதுரெட்டி மற்றும் உறுப்பினர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரதோஷ விழா: மாலை, 4:00 மணிக்கு கோவிலில், பிரதோஷ விழா நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அருகம்புல், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், கோவிலை மூன்று முறைவலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர்.