பதிவு செய்த நாள்
25
ஜூன்
2013
10:06
வங்கனூர்: கனகவல்லி நாயகி உடனுறை லட்சுமி நரசிம்மர், கருட வாகனத்தில் நேற்று அதிகாலை, சொர்க்கவாசலை கடந்து சேவை சாதித்தார். திருத்தணி சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்துடன் இணைந்தது, வங்கனூர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில். மூன்று ஆண்டுகளுக்கு முன், சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆனி மாத பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. இரண்டாம் ஆண்டு ஆனி மாத பிரம்மோற்சவம் கடந்த, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் திருமஞ்சனமும் மற்றும் இரவு சிம்மம், அனுமன், சேஷ வாகனம் உள்ளிட்டவற்றில் சுவாமி வலம் வருகிறார். நேற்று அதிகாலை, 4:00 மணியளவில் லட்சுமி நரசிம்மர், கருட வாகனத்தில் சொர்க்க வாசலை கடந்து சேவை சாதித்தார். கோவில் கோபுரம் முன்பாக காத்திருந்த திரளான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள், "கோவிந்தா,கோவிந்தா என, விண்ணதிர கோஷம் எழுப்பினர். கருட சேவையை முன்னிட்டு, திருப்பதி தேவஸ்தான பஜனை கோஷ்டியினர், நாட்டியம் ஆடியபடி பஜகோவிந்தம் பாடி வந்தனர். கரகாட்டம், வாணவேடிக்கையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி ஊர்வலம் நடந்தது. இரவு யானை வாகனத்தில் உலா வந்தார். விழாவில், வங்கனூர், ஆர்.கே.பேட்டை, சந்தானவேணுகோபாலபுரம், எஸ்.பி.கண்டிகை உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் மற்றும் திருத்தணி தேவஸ்தான இணை ஆணையர் புகழேந்தி, தக்கார் ஜெய்சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.