பதிவு செய்த நாள்
25
ஜூன்
2013
10:06
திருநெல்வேலி: நெல்லை சேரன்மகாதேவி அருகேயுள்ள கூனியூருக்கு புவனேஸ்வரி பீடம் பீடாதிபதி ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் வரும் 27ம் தேதி விஜயம் செய்கிறார். சென்னை யோகமாயா புவனேஸ்வரி பீடம் ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள், புவனேஸ்வரி சுவாமிகளின் 2வது புதல்வர். சிறுவயதிலேயே 9 கோடி முறை பாலா தேவி மந்திரத்தினை ஜெபித்து, உரு ஏற்றி சித்தி பெற்றவர். ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாளின் உபாசகரான இவர், 110 ஆன்மிக மற்றும் விழிப்புணர்வு புத்தகங்களை எழுதியுள்ளார். 500 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். இவரது புத்தகங்ளை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் வெளியிட்டுள்ளனர். கங்கை, காவிரி, கோதாவரி, தாமிரபரணி, ரிஷிகேஷ், ஹரித்வார், காசி, வஷிஷ்டர் குகை, கேதாரம் ஆகிய இடங்களில் நதி பூஜைகளையும் நடத்தியுள்ளார். சேரன்மகாதேவி அருகேயுள்ள கூனியூர் அக்ரஹாரம் சிவகுரு பவனத்திற்கு புவனேஸ்வரி பீடம் பீடாதிபதி ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் 3 நாட்கள் ஆன்மிக பயணமாக விஜயம் செய்கிறார். நெல்லை மாவட்ட மக்கள் சுபிட்சம் அடைய வேண்டி ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் 5 ஆயிரம் ருத்திராட்சம் அணிந்து 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு பூஜை, தியானம் மற்றும் தவம் செய்கிறார். 28ம் தேதி சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் தங்க விக்ரகம் ராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு நதி பூஜையும், ஜெபமும் செய்கிறார். இதில் புவனேஸ்வரி பீடம் சிஷ்யர்களும் கலந்து கொள்கின்றனர். தினந்தோறும் பரத்வாஜ் சுவாமிகளின் நித்யப்படி பூஜையும், கணபதி தர்ப்பனம், பிந்து தர்ப்பனம், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஸ்ரீ சக்ர பூஜைகளையும் பரத்வாஜ் சுவாமிகள் நடத்துகிறார். நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறவுள்ளது.