திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்தபெருமாள் கோவில் தீர்த்தகுளத்தில் உள்ள குப்பைகளை அகற்றி தூர்வார வேண்டும்.திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் முன்பாக பலநூறு ஆண்டுகள் பழமையான தெப்பக் குளம் உள்ளது. இது காலப்போக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு குளம் தெரியாத அளவிற்கு மண் கொட்டி வீடு, கடைகள் கட்டப்பட்டது.10 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய கலெக்டர் கோபாலின் முயற்சியால் காணாமல் போன குளம் கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது. மூடப்பட்ட குளத்தில் இருந்த மண் அனைத்தும் பேரூராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டு குளம் பொலிவு பெற்றது.காணாமல் போன குளம் கண்டறியப்பட்ட செய்தி மாவட்டம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் ஏரியில் இருந்து குளத்திற்கு வரும் பாதாள கால்வாயும் சீரமைக்கப்பட்டு தீர்த்தகுளம் புனிதமான குளமாக மாற்றப்பட்டது. தற்போது நிலவும் கடுமையான வறட்சி காரணமாக குளம் வற்றிவிட்டது. இந்த குளத்தில் குவிந்துள்ள குப்பைகள் மற்றும் சேற்றை அகற்றி, தீர்த்தகுளத்தின் புனிதத்தை காப்பாற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.