Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இருபா இருபஃது பகுதி-1
முதல் பக்கம் » இருபா இருபஃது
இருபா இருபஃது பகுதி-2
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
12:06

11 மதிநின்பால் இந்த மலத்தின் பால்நிற்க
விதிஎன்கொல் வெண்ணெய் வாழ்மெய்ய! பதிநின்பால்
வந்தால் இதில் வரத்தில் வந்து இரண்டும் பற்றுகிலேன்
எந்தாய் இரண்டும் ஆம் ஆறுஎன்.

திருவெண்ணெய் நல்லூரில் எழுந்தருளிய மெய்கண்டதேவரே உயிருக்கு அறிவினை வழங்கி அருளியவர் தாங்கள் அப்படி இருந்தும் தீங்கு விளைவிக்கும் கொடிதாகிய மலத்தோடு கூடி நிற்கும் இழிந்த நிலைமை எனக்கு ஏன் வந்தது? அறிவுப் பிழம்பாகிய தங்களுடன் கூடிய பொழுது மலங்கள் என்னைப் பற்றாது ஒழியவேண்டும். அன்றி மலத்தோடு தொடர்பு கொண்ட நான் முழுமுதல்வனாகிய தங்களைக் கூடுவதற்கான தகுதியை இழந்தவன் ஆகின்றேன் ஆனால் நானோ மலச் சேர்க்கையினால் அறியாமையில் மூழ்கியும் தங்கள் திருவடியைப் பற்றி அதனால் அறியும் தன்மை விளங்கப் பெற்றும் இரண்டு வகையாக மாறி மாறி உழல்கின்றேன். இந்த இரண்டுமற்ற நிலைமை எனக்கு எவ்வாறு வந்தது? விளக்கியருளவேண்டும்,

உயிர் மலங்களோடு சேர்ந்து அறியாமையின் மூழ்கியும் இறைவனோடு சேர்ந்து அறிவு பெற்றும் இருவேறு வகைப்பட்டு விளங்குவதேன் என்பது வினா. உயிர் சார்ந்ததன் வண்ணமாம் தன்மைஉடையது. அதனால் அது சதசத்து என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. சத்தினைச் சார்ந்து சத்தாகவும் அசத்தினைச் சார்ந்து அசத்தாகவும் நிற்கும் இயல்பு உயிருக்கு உண்டு இது சிவஞான சித்தியாரில்.

 பாசி படுகுட்டத்தில் கல்லினை விட்டு எறியப்
படும்பொழுது நீங்கி அதுவிடும் பொழுதில் பரக்கும்
ஆசுபடு மலம்மாயை அரும் கன்மம் அனைத்தும்
அரன் அடியை உணரும் போது அகலும் பின் நணுகும்
எனவும்

 சத்து அசத்து அறிவது ஆனமாத் தான் சத்தும் அசத்தும் அன்று
நித்தனாய்ச் சதசத் தாகி நின்றிடும் இரண்டன் பாலும்

எனவும் விளக்கப்பட்டுள்ளமை அறியலாம், சிவஞான போதத்தில் இக் கருத்து,  இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா என்று உணர்த்தப்பட்டுள்ளது.

12 எண் திசை விளங்க இருட்படாம் போக்கி
முண்டகம் மலர்த்தி மூதறிவு அருளும்
மேதினி உதய மெய்கண்ட தேவ!
கோதுஇல் அமுத ! குணப் பெருங்குன்ற!
என்னின் ஆர்தலும் அகறலும் என்னை கொல்

உன்னில் துன்னி உனாவிடில் பெயர்குவம்
என்னும் அதுவே நின் இயல்பு எனினே
வியங்கோள் ஆளனும் ஆகி இயங்கலும்
உண்டு எனப் படுவை எண்தோள் முக்கண்
யாங்கணும் பிரியாது ஒங்குநின் நிலையின்

யான் வந்து அணைந்து மீள்குவன் ஆயின்
ஆற்றுத்துயர் உற்றோர் அணிநிழல் நசைஇ
வீற்றுவீற்று இழிதர வேண்டலும் வெறுத்தலும்
இன்றிச் சாயைக்கு நன்று மன் இயல்பே
அனையை ஆகுவை நினைவு அரும் காலை

இந்நிலை அதனில் ஏழையேற்கு இரங்கி
நின்னை வெளிப்படுத்து ஒளிப்பை நீயேல்
அருள்மாறு ஆகும், பெரும ! அஃது அன்றியும்
நிற்பெற்ற அவர்க்கும் உற்பவம் உண்டு எனும்
சொற்பெறும் அஃது இத் தொல் உலகு இல்லை
அவ்வவை அமைவும் சோர்வும் மயர்வு அறச்
சொல்லில் சொல்லெதிர் சொல்லாச்
சொல்லே சொல்லுக சொல் இறந்தோயே!

உலகின் எட்டுத் திசைகளும் விளங்குமாறு இருட் போர்வையினை அகற்றித் தாமரை மலர்களை மலரச் செய்து உலகத்தை விளக்கமுறும்படி கதிர்களைப் பரப்பும் உதய ஞாயிற்றை ஒத்த மெய்கண்டதேவரே, உயிர்களுக்கெல்லாம் இருளாகிய மலத்தை நீக்கிச் சிவஞானம் என்னும் ஒப்பற்ற அறிவினை வழங்குபவரே கோதற்ற அமுதமும் குணப்பெரும் குன்றும் ஆகத்திகழ்பவரே எங்கெங்கும் நிறைந்திருக்கிற தாங்கள் ஒரு பொழுது என்னோடு கூடியும் மற்றொரு பொழுது என்னை விட்டு அகன்றும் நிற்பது எதற்காக ? உயிராகிய நீ என்னை நினைக்கும் போது உன்னோடு பொருந்தியும் எம்மை நினையாதபோது உன்னைவிட்டுப் பெயர்த்தும் நிற்பது எமது இயல்பு என்று நீர் உரைத்து அருளுவீர் ஆயின், நீர் எனது ஏவலுக்கு உட்பட்டு என்னோடு சேர்ந்தும் என்னை விட்டுப் பிரிந்தும் நிற்பீர் என்றாகும். அதுவுமன்றி எங்கும் நிறைந்தவர் என்ற உமது தன்மைக்கு மாறாக ஏகதேசப் பொருளாகிப் போக்கும் வரவும் உடையவர் ஆவீர்.

அப்படியன்று எண்தோளும் முக்கண்ணும் உடைய நாம் எங்கணும் பிரியாது. யாவற்றுள்ளும் நிறைந்து அசைவற்று நிற்க உயிராகிய நீதான் எம்மை வந்து கூடியும் எம்மைவிட்டுப் பிரிந்தும் அசைவுற்று நிற்பாய் என்று கூறுவீராயின், அப்போதும் நீர் எங்கும் நிறைந்தவர் ஆகையினாலே நான் தங்களுடன் கூடியும் பிரிந்தும் நிற்க இயலாது.

வெப்பம் மிக்க கடும் பகலிலே வழிநடந்து களைப்புற்றவர்கள் வெயிலின் கொடுமைக்கு ஆற்றாமல் சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் நிழலில் சென்று தங்கி இளைப்பாறுலர். அதன் பின்னர் அதனைவிட்டு நீங்கித் தம் வழிநடையை மேற்கொண்ட போது அம்மரம் அவர்கள் வந்து தங்கியதற்காக மகிழ்வதுமில்லை அவர்கள் எழுந்து சென்றதற்காக வெறுப்பதுமில்லை. அந்த மரத்தின் நிலையே தங்களுக்கும் ஆகும். மேலும் மரத்தின் நிழல் போலத் தாங்கள் நிற்பீராயின் நிழலில் வந்து தங்கி எழுந்து செல்லும் வழிப்போக்கனே முதன்மை உடையவனாதல் போலத் தங்களுக்கு முதன்மையின்றி, உயிரே முதன்மை உடைத்து என்றது ஆகும்.

அதுவன்று, எங்கும் நிறைந்திருக்கும் நாம் உயிராகிய நீ எம்மை அன்போடு நினைக்கும் போது வெளிப்பட்டும் நினையாத பொழுது மறைந்தும் நிற்கிறோம் என்பீராயின், ஏழைக்கு இரங்கி வெளிப்பட்ட நீர் மீண்டும் ஒளிப்பீராயின் அது உம்முடைய அருளுக்கு மாறுபாடாகும். அதுவுமன்றி உம்மை அடையப் பெற்றவர்களுக்கும் மீளவும் பிறப்பு உண்டு என்ற சொல்லுக்கு இடம் கொடுக்கும். உமக்கு இழுக்கும் ஆகும். உம்மை அடைந்தவர்கள் மீளப் பிறப்பது இந்தத் தொன்மையான உலகில் இல்லவே இல்லை என்பதே மெய் ஆகும். எனவே இங்கே எழுப்பப்பட்ட ஐயங்களுக்கு என் மயக்கம் தீரும் வண்ணம். உன் சொல்லுக்கு எதிர்சொல் இல்லையாம் வண்ணம், சொற்களைக் கடந்து நிற்கும் பெருமானே, எனக்குச் சொல்லி அருள வேண்டும்.

இந்தப்பகுதியில் இறைவன் உயிர்களோடு கலந்து நிற்கும் இயல்பைப் பற்றி வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன உயிர்களோடு இறைவன் ஒவ்வொரு நேரம் கலந்தும் ஒவ்வொரு நேரம் பிரிந்தும் இருப்பது ஏன்? என்பது முதல் வினா. இறைவன் உயிரோடு கூடியும் பிரிந்தும் வருவான் என்பது பொருந்தாது. அவன் எக்காலத்தும் உயிரோடு கலந்தே நிற்கிறான். உயிர்தான் தனது மலப்பிணிப்பினால் உலகப் பொருள்களில் தோய்ந்து இறைவனை மறந்தும் ஓரொருகால் அவனை நினைந்து அவனோடு கூடியும் மாறிமாறிப் பயின்றுவரும் என்பது இதற்கு உரிய விடையாகும். இவ்விடத்தில் திருநாவுக்கரசர் அருளிய  பன்னில் ஊரும் பழத்தினில் இன்சுவை  என்று தொடங்கும் தேவாரப் பாடல் வரிகள் எடுத்தாளப்பட்டுள்ளன.

இரண்டாவது வினா முதல் வினாவை அடியொற்றி எழுவதாகும். உயிர் பாசத்தைச் சார்ந்தபோது இறைவன் வெளிப்படாமல் நிற்பான். தன்னைச் சார்ந்தபோது வெளிப்பட்டு அருளுவான் என்று கூறினால் உயிர்களுக்கு முதன்மை வருகிறதேயன்றி இறைவனுக்கு முதன்மை இல்லையே? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு உவமையாகச் சாலை ஓரத்தில் நிற்கும் மரம் எடுத்துக்காட்டப்படுகிறது. வெப்பத்தால் வருந்தி வரும் வழிப்போக்கன் மரநிழலை அடைந்து இளைப்பாறுகிறான். தன் களைப்பு நீங்கிய பொழுது நிழலைவிட்டு நீங்கி வழிநடையைத் தொடர்கினான். நிழல் மரம் அவன் வந்ததற்காக மகிழ்வதில்லை. அவன் நீங்கியதற்காக வெறுப்பதுமில்லை, இந்த உவமையின்படி இறைவன் உயிர்களிடத்துப் பெருங்கருணை உடையவன் என்பது இழுக்குப்படுமே? என்பது அடுத்த வினா. இந்த வினாவிற்கு உரிய விடை ; சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடன் ஆதலினால் அவன் தன்னடைந்தார்க்கு இன்பங்கள் தருவான் என்பதில் அவனுக்கு இழுக்கு நேராது என்பதாகும். திருநாவுக்கரசு நாயனார் தேவாரத்தில் , சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அல்லால், நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலன் குலம் இலர் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சிவாயவே  எனவும் உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருவருட்பயனில் , நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன், சலமிலன் பேர்சங்கரன்  எனவும் கூறப்பட்டிருத்தல் காண்க.

என்னிடத்து இரங்கித் தங்களை வெளிப்படுத்தி அருளுகின்ற தாங்களே பிறிதொரு சூழலில் என்னிடத்தில் இருந்து ஒளித்துக் கொள்வீர் என்று கூறினாலும் அதுவும் தங்கள் பெரும் கருணைக்கு இழுக்காகும். தங்களுடைய அருளுக்கும் இலக்கானவர்கள் மீண்டும் பிறப்பதில்லை என்ற பழமையான வழக்குக்கு மாறுபாடும் ஆகும் என்பது மூன்றாவது வினா.

இந்த வினாக்களுக்கு எல்லாம் விடையாக இறைவன் உயிர்களோடு ஒன்றாகவும், உடனாகவும் வேறாகவும் நிற்கிறான். ஆதலால் உயிர்கள்  சென்று இறைவனோடு கூடுவது என்பதற்கோ அல்லது இறைவன் வந்து உயிர்களுடன் கூடுவன் என்பதற்கோ இடமில்லை. மலப்பிணிப்புற்ற உயிர்கள் இறைவன் தமக்கு நீங்காத் துணையாக இருக்கிறான் என்பதனை உணரவில்லை. பிணிப்பிலிருந்து விடுபட்ட உயிர்களுக்கு வெளிப்பட்டுத் தோன்றுகிற சிவப்பெருமான் விடுபடாத உயிர்களுக்குத் தோன்றாத் துணையாக விளங்குகிறான். அவன் பெரும் கருணையாளன் என்பதில் ஐயமில்லை.

இந்தப்பாடலில் ஆறாவது வரியில் உன்னில் உன்னி என்று தொடங்கும் திருநாவுக்கரசரின் தேவாரம் ஒன்று மேற்கோளாக ஆசிரியரால் எடுத்தாளப்பட்டிருக்கிறது. அந்தப் பாடல் வருமாறு,

பன்னில் ஊறும் பழத்தினாள் இன்சவை
 என்னில் ஊறி எனக்கே களிதரும்
 உன்னில் உன்னும்  உனாவிடில் விட்டிடும்
 என்னுள் ஈசன் இருந்த இயற்கையே

இத்திருப்பாடல் இதுவரை வெளிவந்துள்ள தேவாரப் பதிப்புக்களில் இடம் பெறாது போயிற்று. ஆயினும் தாயுமான சுவாமிகள் தமது எந்நாட் கண்ணியில்

உன்னில் உன்னும் என்ற உறுமொழியால் என் இதயம்
தன்னிலுன்னி நன்னெறியைச்சாரும் நாள் எந்நாளோ?

என்று இப்பாடலை எடுத்தாண்டிருக்கிறார். அதுபோலவே திருவாவடுதுறை ஆதீனத்து நமச்சிவாயத் தம்பிரான் அவர்கள் தாம் இருபா இருபஃது நூலுக்கு வரைந்த உரையில் இப்பாடல் முழுவதையும் எடுத்துக்காட்டி அதனைத் தேவாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் தாம் எழுதிய சைவ சமய சரபம் என்னும் நூலில் இத்தேவாரப் பாடலை எடுத்தாண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சுவாமிநாத பண்டிதர் அவர்கள் வெளியிட்ட அடங்கன் முறைப் பதிப்பில் இப்பாடல் பிற்சேர்க்கையில் தரப்பட்டுள்ளது. ஓர் அரிய தேவாரப்பாடலை ஆசிரியர் அருள் நந்தி சிவம் நமது நூலில் மேற்கோளாகக் காட்டியதன் வாயிலாக நமக்கு அத்தேவாரப் பாடலைப் பாதுகாத்து வழங்கியுள்ளார்.

இத்திருவாசிரியத்தின் இறுதிவரிகள் திருக்குறளில் சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை வெல்லும் சொல் இன்மை தெரிந்து  என்ற பாடலை நினைவூட்டுவன ஆகும்.

13 இறந்தோய் கரணங்கள் எல்லாம் எனக்குச்
சிறந்தோய் எனினும் மெய்த்தேவே! பிறந்து உடனாம்
காயம் கொளவும் கொளாமலும் கண்டதுநீ
ஆயன்கொல் பாதவத்து அற்று

கருவி கரணங்களைக் கொண்டு அறிகின்ற உயிரின் அறிவுக்கு எட்டாமல் நிற்கின்ற மெய்கண்ட தேவரே, தாங்கள் அடியேனுக்குக் கருவி கரணங்களை உதவி அருளினீர் அதனால் உலகில் பிறப்பெடுத்தது முதல் நான் என் உடலும் எனது கருவி கரணங்களுமே மெய்யெனக் கொண்டு வாழ்ந்து வந்தேன். பின்னர் அருள் நூல்களாலும் ஆசிரியரின் உபதேச மொழிகளாலும் கருவி கரணங்கள் பொய் என உணர்ந்த போதும் அவற்றை விட்டு நீங்குவதற்கு ஆற்றல் இல்லாமல் ஆயன் வெட்டிய மரம் போல ஒரு பகுதி ஒட்டியும் ஒருபகுதி விலகியும் அலமந்தேன். இதற்கு என்ன காரணம் என்று அருளிச்செய்தல் வேண்டும்.

ஆணவ மலத்தில் அழுந்திக் கிடந்த உயிருக்கு இறைவன் உடல், கருவி உலகு நுகர்ச்சிப்பொருள் ஆகியவற்றை அளித்தருகிறேன் அவ்வாறு அளித்தருளுவது உயிரின் அறிவு படிப்படியாக விளக்கமுறு  வதற்காகவே. இந்நான்கும் மாயையாகிய ஒண்தளையின் காரியங்கள் இக்கருத்து மாயை கொடு மலம் ஒழிப்பன் முன்னோன் என்று சிவஞானசித்தியார் (142) சுபக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஆயினும் உயிர், தன் சிற்றறிவினால் கருவி கரணங்களே தான் என மயங்கி உணர்கிறது. ஆசிரியர் அருள் மொழியினாலும் பிறவாற்றாலும் தத்துவங்கள் வேறு தான் வேறு என்று உணர்ந்தாலும் உயிர் அவற்றை விட்டு முற்றிலும் நீங்க முடியாமல் ஒட்டியும் பிரிந்தும் தத்தளிக்கிறது. இந்த நிலையை விளக்குவதற்கு ஆயன் கொல் பாதவத்து அற்று என்ற உவமையை ஆசிரியர் பயன்படுத்துகிறார்.

இந்த வினாவுக்குவிடை : உயிரின் முன்னேற்றம் கருதியே இறைவன் உயிருக்குக் கருவி கரணங்களை வழங்கி அருளினான். அவற்றோடு பொருந்தியும் நீங்கியும் ஐந்து அவத்தைப்பட்டு உயிர்கள் விளை நீக்கம் பெறுவதற்காகவே இறைவன் இவ்வாறு செய்தருளினான் என்பதாகும்.

காடுகளில் ஆடுகளை மேய்க்கும் ஆயர்கள் வளர்ந்தோங்கிய மரங்களின் கிளைகளைப் பாதி வெட்டி முழுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்குமாறு சாய்ப்பார்கள் இவ்வாறு வெட்டப்பட்ட கிளைகள் மரத்தோடு ஒட்டிக்கொண்டிருப்பதால் மறுபடியும் தழைக்கும் இவ்வாறு இல்லாமல் முழுவதும் துண்டிக்கப்பட்ட கிளை பயனற்றுப் போய்விடும் இதனால் இடையன் வெட்டு அறா வெட்டு  என்ற பழமொழியே எழுந்தது. தமிழ் இலக்கியங்களில் பழமொழி நானூறு. சீவகசிந்தாமணி, கலித்தொகை பெரியமொழி போன்றவற்றில் இவ்உவமை பயன்படுத்தப்பட்டுள்ளது நினையத்தக்கது.

14 அற்றது என் பாசம் உற்றது உன் கழலே
அருள் துறை உறையும் பொருள் சுவைநாத!
வேறு என்று இருந்த என்னை யான் பெற
வேறு இன்மை கண்ட மெய்கண்ட தேவ!
இருவினை என்பது என்னைகொல் அருளிய

மனமே காயம் வாக்கு எனும் மூன்றின்
இதமே அகிதம் எனும் இவை ஆயில்
கணத்திடை அழியும் தினைத்துணை ஆகா
காரணம் சடம் அதன் காரியம் அஃதால்
ஆர் அணங்கு ஆம்வழி அடியேற்கு என்னைகொல்

செயல் எனது ஆயினும் செயலே வராது
இயமன் செய்தி இதற்கு எனில் அமைவும்
பின்னை இன்று ஆகும் அன்னதும் இங்குச்
செய்திக்கு உள்ளசெயல் அவை அருத்தின்
மையல்நீர் இயமற்கு வழக்கு இல்லை மன்ன!

ஒருவரே அமையும் ஒருவா ஒருவற்கு
இருவரும் வேண்டா இறைவனும் நின்றனை
நின்னது கருணைசொல் அளவு இன்றே
அமைத்தது துய்ப்பின் எமக்கு அணைவு இன்றாம்
உள்ளது போகாது இல்லது வராது

உள்ளதே உள்ளது எனும் உரை அதனால்
கொள்ளும் வகையில் கொளுத்திடும் ஆயின்
வள்ளன்மை எலாம் உள்ளிட அமையும்
ஈயவேண்டும் எனும்விதி இன்றாம்
ஆயினும் என்னை அரும்துயர்ப் படுத்தல்

நாயி னேற்கு நன்றுமன் மாயக்
கருமமும் கரும பந்தமும்
தெருள அருளும் சிவபெரு மானே!

திருஅருட்டுறைத் திருச்கோவிலிலே எழுந்தருளி இருக்கும் எங்கள் தலைவரே, பாசப்பிணிப்பினால் தங்களை அணுக இயலாதிருந்த என்னைத் தங்கள் திருவருட் பெருக்கால் வேறு ஆகாதபடி ஆண்டு கொண்ட மெய் கண்டதேவரே தங்கள் திருவருளால் என் பாசங்கள் அற்றன. நான் தங்கள் திருவடிகளைச் சார்ந்து உய்ந்தேன்.

இருவினை என்று சொல்லப்படுவது யாது? மனம் உடம்பு சொல் ஆகியவற்றால் பிற உயிர்களுக்கு இழைக்கப்படும் நன்மை தீமைகளால்  புண்ணிய பாவங்களாகிய இருவினைகளும் தோன்றுகின்ற என்பீராயின், நினைவும் சொல்லும் செயலும் ஆகிய இவை தோன்றிய நொடியிலேயே அழிந்து போகும் இயல்பு உடையன. அவை தினையளவு நேரமேனும் நிலைப்பனவல்ல.

மேலும் மனம் மொழி  மெய்கள் சடப்பொருள்கள். ஆதலால் அவற்றின் காரியங்களாகிய இருவினைகளும் சடப்பொருள்களே ஆகும். அவ்வாறு இருக்க இந்தச் சடப்பொருள்கள் உயிர்கள் எடுக்கின்ற மேலைப் பிறப்புகளிலும் சென்று பற்றும் என்பது எவ்வாறு?

மனம் வாக்கு காயங்களும் அவற்றின் செயலால் விளைவதாகிய இருவினைகளும் சடமே. ஆயினும் உயிர்களுக்கு அறிவு உண்டு ஆதலால் உயிர்களோடு அவை சேரும் காலத்து அவை செயற்படுகின்றன என்று கூறினால் உயிர்கள் தமக்கென ஒரு செயலும் அற்றன என்ற கருத்தின்படி உயிர்களுக்கே செயல் இல்லாத போது உயிர்களைச் சார்ந்த சடப்பொருள்களுக்குச் செயல்படும் தன்மை எவ்வாறு வந்தது?

உயிர்களுக்குச் செயல்படுகின்ற ஆற்றல் உண்டு என்று சொன்னால் உயிர்களின் கருத்துப்படி எல்லாச் செயல்களும் நிகழ்வதில்லையே மேலும் உயிர்களின் கருத்துப்படியே அவற்றால் செயலாற்ற முடியுமாயின் அவை தமக்கு எமதண்டனை கிடைக்கும் வண்ணம் செயலாற்ற மாட்டா. அதுவுமல்லாமல் உயிர் தாமே செயற்படுமாயின் உயிர்களுக்கு முதன்மை ஏற்பட்டுத் தாங்கள் உயிர்களுக்கு உதவுவது என்பது இல்லையாய் முடியும்.

உயிர்கள் செய்த நன்மை தீமைகளுக்கும் ஏற்ற பயனே  அவற்றுக்குத் தாங்களே ஊட்டுவீர்கள் எனின் உயிர்களைத் தண்டித்தற்கு இயமன் என்ற ஒருவன் வேண்டுவதில்லை, இயமனும் தண்டிப்பான் நாமும் வினைப்பயனை ஊட்டுவோம் எனில் ,உயிர்களை ஒறுப்பதற்கு ஒருவரே போதும் இருவர் வேண்டியதில்லை இயமனும் வேண்டுமென்றால் உம்முடைய வரம்பில் ஆற்றலுக்கு இழுக்கு நேரிடும்.

அருள் பாலிப்பதற்கு நானும் ஒறுத்தலுக்கு இயமனும் என்று தாங்கள் விடையிறுத்தால், தங்கள் பெருங்கருணைத் திறத்திற்கு அது இழுக்காக அமையும்.

உயிர் தான் செய்த வினைக்கேற்ப அதன்பயனை அனுபவித்தே ஆக வேண்டும் என்றால் அதன் மூலம் உயிர்களுக்குப் புதிய வினைகள் தோன்றும் என்பதும் பொருந்துவது அன்றாம். சற்காரிய வாதத்தின் படி உள்ளது போகாது; இல்லாதது வாராது; உள்ளதே உள்ளது. என்பனவே நிலையான உண்மைகள் இதன்படி உள்ளதாகிய பிராரத்தவினையை அனுபவிக்கும் காலத்து இல்லாததாகிய ஆகாமியவினை புதிதாகத் தோன்றும் என்பது பொருத்தமற்றது ஆகும் பிராரத்தவினையை நுகரும் போது ஆகாமிய வினையும் தோன்றத்தான் செய்யும் எனில் அறநூல்களில் விதிக்கப்பட்ட அறச் செயல்களைச் செய்து அவற்றின் மூலம் புண்ணியம் தேடிக்கொள்ளுதல் வேண்டும் என்ற நியமம் நூல்களால் வலியுறுத்தப்பட வேண்டியதில்லை வினையும் வினையால் விளையும் கட்டுக்களுமாக எம்மைத் துயரத்தில் ஆழ்த்தும் இவற்றின் தன்மைகளை நான் தெளிவாக அறியுமாறு பெருமானே தாங்களே விளக்கி அருளுதல் வேண்டும்.

இப்பாடலில் எழுப்பப்படுகின்ற முதலாவது வினா இருவினை என்பது யாது? அதற்கு விடை மனம் மொழி மெய்களால் செய்யப்படும் செயல்களே வினை எனப்பட்டன. வினைகள் எல்லாம் செய்யப்பட்ட உடனேயே மறைந்து போகின்றன அல்லவா? மேலும் வினைக்குக் கரணமும் அவற்றின் காரியமாகிய வினைகளும் சடப்பொருள்கள். ஆதலால் அவற்றுக்குச் செயல் இல்லை அல்லவா? என்பன அடுத்துத் தொடுக்கப்படும் துணை வினாக்கள் இவற்றுக்கு விடை வினை என்பது நினைவு சொல் செயல் என்ற மூன்றினாலும் உயிரால் இயற்றப்படுவது உயிர் விருப்பு வெறுப்புக்களாலே இயற்றுகின்ற இந்த வினைகள் அதனதனுக்கேற்ற பயனைத் தந்தே தீரும் வினை செய்யப்பட்ட உடனே அழிந்து போகிறது எனத் தோன்றினாலும், அச்செயலின் பதிவு  மனத்தைப் பற்றிக் கொண்டு கிடத்தலால் உரிய காலம் வரும் போது அவ்வினையின் பயன் இறைவனால் உயிர்களுக்கு ஊட்டப்படுகிறது.

வினையின் பயன்களுக்கு ஏற்ப இயமன் உயிர்களை ஒறுக்கின்றனன் என்பது ஏன்? இறைவன் ஒருவன் உள்ள போது இயமனுக்கு ஒறுத்தல் தொழில் கூறுவானேன்? ஒரே செயலுக்கு இருவர் தேவை இல்லையே? என்பன அடுத்து எழுப்பப்படும் வினாக்களாகும். போற்றிப் பஃறொடையில் வெற்றிக் கடும் தூதர் வேகத்துடன் வந்து என்பது தொடங்கி வல்ல கருணை மறம் போற்றி என்பது வரையில் கூறப்பட்ட செய்திகள் இயமனின் ஒறுத்தல் தொழிலும் இறைவனின் ஆணைப் படியே நிகழ்கிறது என்று விளக்கும் பகுதி. அது இந்த வினாக்களுக்கு விடையாகும்.

உள்ளது போகாது; இல்லது வாராது; உள்ளதே உள்ளது எனப்படும் சற்காரிய வாதத்தின்படி பண்டை வினைப் பயனை நுகருங்கால் இதற்கு முன்இல்லாததாகிய புதிய வினைகள் தோன்றும் என்பது பொருந்துமா? என்பது அடுத்த வினா வினையின் பயன்களை அனுபவிக்கும் பொழுது உயிர்கள் விருப்பு வெறுப்போடு செயல் படுவதால் புதிய வினைகள் தோன்றுகின்றன. இதுவே ஆகாமியம் எனப்பெயர் பெறுவது. இதனைப் பிற்செயாது அனுபவிப்பது இன்று என்று சிவஞான சித்தியார் (101) அறிவுறுத்துகிறது. வினையும் வினையினால் வரும் கட்டும் இவ்வாறே தொடரும் என்பது அருள் நூல்களால் எடுத்துரைக்கப்பட்டது.

15 மான் அமரும் செங்கை மதில் வெண்ணெய் வாழ்மன்ன!
போனவினை தானே பொருந்துமோ  யான் அதனில்
ஆவனோ ஆக்காய் அமலனாம் நின் அருள்தான்
தேவனே! யாதுக்கோ தேர்.

சிவந்த திருக்கரத்தில் மானை ஏந்திய பெருமானே, மதில் சூழ்ந்த திருவெண்ணெய் நல்லூரில் வாழ்கின்ற மன்னனே. முந்திய பிறவிகளில் நான் செய்த வினைகள் தாமே வந்து என்னைக் கூடுமோ? அல்லது அவற்றை நானே சென்று கூடுவேனோ? அல்லது தாங்கள் தாம் என்னையும் வினையையும் கூட்டுவீர்களோ? தாங்கள் நின்மலன் ஆகையினாலே வினை யையும் என்னையும் கூட்டமாட்டீர். அப்படி இருந்தும் வினை என்னோடு கூடுமானால் உமது அருளால் பயன் உளதோ?

இப்பாடலில் முன்னைப் பிறப்பில் செய்த வினைகள் உயிரை எவ்வாறு வந்து பற்றுகின்றன என்பது பற்றிய வினாக்கள் எழுப்பப் படுகின்றன. வினையே சென்று செய்தவனைப் பற்றும் என்பது சமணர்களின்  கொள்கை. வினை அறிவற்றது ஆதலால் அது தானாகச் செய்தவனைச் சென்று பற்றாது என்பது சைவ சித்தாந்தம் கூறும் கொள்கை. வினையை உயிர் சென்று பற்றுமா  எனில் உயிருக்கும் அந்த ஆற்றல் இல்லை. இறைவனே வினையின் பயனை வினை செய்தவர்களுக்குத் தப்பாமல் கூட்டுவான். அவ்வினையை பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல் யார் தான் அறிந்து அணைப்பார் ஆங்கு என்பது சிவஞான போதத்தின் எடுத்துக்காட்டு வெண்பா (11) இவ்வாறு கூட்டினாலும் இறைவன் வினைகளில் தோய்வற்றே நிற்பான் ஆதலால் அவன் அமலன் என்பதற்கு இழுக்கில்லை. அதுபோலவே வினையின் பயனே உயிர்களுக்கு ஊட்டுவதனால் இறைவன் அருளுக்கும் இழுக்கில்லை. சிவஞான சித்தியாரில் எக்கிரமத்தினாலும் இறை  செயல் அருளே என்றும் (105) என்று இறைவனின் திருவருள் உயர்வு அறிவுறுத்தப்படுகிறது.

16 தேராது உரைப்பன் தெருமரல் உளத்தொடு
பேராது அருளுதல் பெரியோர் கடனே
நின்னைக் கலப்பது என் உண்மை எனில்
நின்னது நேர்மை சொல்மனத்து இன்றே
எழுவகைத் தாதுவின் ஏழ்துளை இரண்டும்

யெருமுழைக் குரம்பையில் பெய்து அகத்து அடக்கி
நீக்கி என்றனைப் போக்கு அறநிறுத்தி
இச்சை முதலிய எழுப்பி நடத்திடும்
விச்சை சாலவும் வியப்பு அது நிற்க
வாக்கும் மனமும் போக்கு உளதனுவும்

சொல்லும் நினைவும் செய்யும் செயலும்
நல்லவும் தீயவும் எல்லாம் அறிந்து
முறைபிற ழாமல் குறைவு நிறைவு இன்றாய்க்
காலமும் தேசமும் மால் அற வகுத்து
நடுவுநின்று அருத்தலின் நடுவன் ஆகுதியே

சான்றோர் செய்தி மான்று இருப்பு இன்றே
சாலார் செயலே மால் ஆகுவதே
அத்துவா மெத்தி அடங்கா வினைகளும்
சுத்திசெய் தனையே ஒத்தகன் மத்திடை
நீங்கின என்னை ஊங்கு ஊழ் வினைகளும்

ஆங்கு அவை அருத்துவது ஆரைகொல் அதனால்
கருமம் அருத்தும் கடன் அது அன்றாம்
தருமம் புரத்தல் பெருமையது அன்றே
கண்ணினுள் மணியே! கருத்தினுள் கருத்த!
வெண்ணெய் வேந்த! மெய்கண்ட தேவ!

இடர்படு குரம்பையுள் இருத்திந்
துடைப்பது இல்லா அருள் தோன்றிடச் சொல்லே.

என் கண்மணி போன்றவரே,  என் கருத்தினுள் கருத்தாக விளங்குபவரே, திருவெண்ணெய்நல்லூரின் வேந்தரே, மெய்கண்ட தேவரே, என் மயக்கத்தின் விளைவாகக் கலங்கிய உள்ளத்தோடும் தங்கள் முன் விண்ணப்பம்  செய்கின்றேன். சிறியோர்கள் மயக்கத்தினால் கேட்கின்ற ஐயங்களையும் நீக்கியருளுதல் பெரியோர்கள் கடன் ஆகையினால் எனக்கு விளக்கமளித்து அருளுவீராக.

தங்களைக் கூடி அதனால் விளைகின்ற பேரின்பத்தினை நுகர்வது எனது சிற்றறிவு எனின் தங்களது பெருமை என் சொல்லுக்கும் மனத்துக்கும் எட்டாதது அன்றோ?

நரம்பு எலும்பு மூளை தசை தோல் குருதி விந்து ஆகிய தாதுக்கள் ஏழும் இரண்டும் கண்கள், வாய், இரண்டு நாசிகள், இரண்டு காதுகள், கருவாய், எருவாய் என்னும் ஒன்பது துளைகளும் கூடிய இந்த உடம்பாகிய குரம்பையிலே உயிராகிய என்னை விட்டு வைத்தும் என் வினைக்கு ஏற்ப உரிய காலம் வரை அதனைக் காத்தும் கால எல்லையில் உயிரை அவ்உடம்பாகிய சிறையிலிருந்து விடுவித்தும் இச்சை செயல் அறிவு ஆகியவற்றை என்னிடத்திலே தோன்றச் செய்து என்னையும் இயக்கி நிற்கின்ற தங்களுடைய பேராற்றல் மிகவும் வியக்கத்தக்கது.

என் மனம் மொழி மெய்களால் நான் நினைப்பதும் சொல்லுவதும் செய்வதும் ஆகிய நல்லனவும் தீயனவும் ஆகிய எல்லைவற்றையும் தங்கள் பேராற்றலால் அறிந்து அவ்வினைப் பயன்களைப் முறை பிறழாமலும் குறைவும் கூடுதலும் இல்லாமலும் எனக்கு ஊட்டி வருகின்றீர். வினைப் பயன்களை நான் நுகர்வதற்குரிய காலம், இடம் முதலிய சூழ்நிலைகளையும் நடுவு நிலை பிறழாமல் தாங்களே வருத்துக் தருகிறீர்கள். எனவே நடுநிலையாளராகவும் விளங்குகின்றீர்.

சான்றோர்கள் செய்யும் செயல்கள் யாவும் மயக்கத்துக்கு இடம் தருவனவாக இருக்க மாட்டா, சான்றான்மை அற்றவர்கள் செயலே காரண காரியம் இன்றியும் முறை மாறுபட்டும் காணப்படும்.

சான்றோர் ஆகிய நீர் எனக்கு ஞான ஆசிரியராக எழுந்தருளித் தீக்கை அளித்தருளிய போது,மந்திரம் சொல் எழுத்து உலகு தத்துவம் கலை என்று கூறப்படும் வாயில்கள் ஆறினும் நிரம்பித் ததும்பிய வினைகளைத் தூய்மை செய்து போக்கியருளினீர். அந்தச் சூழ்நிலையில் எனக்கு இருவினை ஒப்பும் வாய்க்கப் பெற்றது எனின் தங்களால் ஒழிக்கப்பட்ட வினையாது? தாங்கள் தீக்கை அளித்த போது வினைகள் எல்லாம் என்னை விட்டு அகன்றன அவற்றின் பயன்கள் என்னவாகும்? மேலும் அவற்றின் பயனை யார் நுகர்வார்? அவ்வினைகளைச் செய்தவன் நானே ஆதலால் அவற்றின் பயனை நானே நுகர்தல் வேண்டும் எனின் தங்கள் பேரருளால் தூய்மை பெற்ற நான் மீளவும் வினைப் பயனை நுகர்வது என்பது தங்கள் பெருமைக்கு இழுக்காகும். அதுவுமன்றி அறத்தைக் காக்கின்ற தங்களுக்கு அது தகுதி யன்றாம். வினை ஒழித்த பின்னும் துன்பம் தருகின்ற இவ் உடலாகிய கூட்டில் இருத்தி அதன் வினையை நீக்குவதற்கு என்ன காரணம் என்பதையும் அடியேனுக்கு உரைத்தருளுவீராக.

ஒப்பற்றவனாகிய இறைவன் சொல்லுக்கும் மனத்துக்கும் எட்டாதவன் ஆதலால் சிற்றறிவுடைய உயிர் அவனைக் கலந்து அவனது எல்லையில்லாப் பேரின்பத்தை எவ்வாறு அனுபவிக்க முடியும்? என்பது முதல் வினா. உடலோடு கூடி இருக்கும் உயிர் பாசப் பிணிப்புக்களால் கட்டுண்டு இருப்பது ஆதலால் தன்னோடு எக்காலத்தும் பொருந்தி இருக்கிற இறைவனை அதனால் உணர முடியவில்லை என்பது உண்மையே ஆயினும் பாசப் பிணிப்புக்கள் நீங்கிய நிலையில் உயிர் இறைவனை உணர்ந்து இன்புறும் என்பது இவ்வினாவிற்கு உரிய விடை.

இரண்டாவது வினா ; இறைவன் உயிரை எழுவகைத் தாதுக் களும் ஒன்பது வாயில்களும் உடைய துயரத்திற்கு நிலைக்களமான உடலில் புகச் செய்து உயிரினுடைய அறிவு விழைவு ஆற்றல் களைத் தூண்டி மனம் மொழி மெய்களான மூன்றினாலும் நல்லனவும் தீயனவும் ஆன வினைகளைச் செய்விப்பது ஏன் ? என்பதாகும் இதற்குரிய விடை ஆணவ மலத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டு அறிவும் செயலுமற்று இருட்டறையில் கிடக்கும் பிறவிக் குருடனைப்போல இருந்த உயிரைப் படிமுறையிலே முன்னேற்றுவதற்காகத் தத்துவக் கூட்டங்களை உயிரோடு இறைவன் பொருத்துகிறான். இது குருடனுக்கு ஊன்று கோல் கொடுத்து உதவுவது போன்றது. இந்த நிலையில் உயிர் தத்துவக் கூட்டங்களே தான் என மயங்கி அதனால் இருவினைகளையும் ஈட்டுகின்றது அதன் பயனையும் நுகர்கின்றது என்பது இவ்வினாவிற்குரிய விடையாகும்.

நடுவு நிலைமையும் சான்றாண்மையும் உடைய இறைவன் உயிரின் பக்குவ நிலையை அறிந்து ஞான ஆசிரியனாக எழுந்தருளி வந்து அத்துவாக்களைத் தூய்மை செய்து வினைகளைப் போக்கியருளுவான் என்று கூறப்படுகின்றது. அப்போது போக்கப்படுகிற வினைகள் யாவை? என்பது அடுத்த வினா வினைகள் சஞ்சிதம் பிராரத்தம் ஆகாமியம் என்று முத்திறப்படும் இவற்றுள் சஞ்சிதம் என்பது பலபிறவிகளில் ஈட்டப்பட்டு நுகர்வதற்காக எஞ்சிய பழ வினை. பிராரத்தம் என்பது இப்பிறவியில் நுகர்வதற்காக இறைவனால் கூட்டப்பெற்ற நுகர்வினை. ஆகாமியம் என்பது இந்தப் பிறவியில் வினைகளின் பயன்களை உயிர்கள் நுகரும் போது விருப்பு வெறுப்புக்களால் ஈட்டிக்கொள்ளும் ஏறுவினை ஞான ஆசிரியன் தீக்கை செய்யும் காலத்துப் பண்டு செய்த பழவினையைத் தன் அருளால் துடைத்து எறிவான். ஏறுவினை வளராத வண்ணம் தடுத்து அருள்வான். பிராரத்த வினையாகிய என்றவினை மட்டிலும் உயிர்களால் நுகர்ந்து கழிக்கப்படும் எனவே இறைவனது அருளுக்கு இழுக்கில்லை என்பது இவ்வினாவிற்குரிய விடையாகும்.

தீக்கை செய்யும் காலத்து வினைகளை நீக்கிய பின்னும் அத்தகைய உயிர்களை மேலும் உலகத்தில் வாழச் செய்வதும் வினைகளை நுகரச்செய்வதும் எதற்காக? என்பது அடுத்து எழுப்பப்படும் வினா பிராரத்த வினையை நுகர்ந்து கழிக்கவே அவ்வுயிர்களை உலகில் வாழுமாறு இறைவன் பணிக்கிறான். அத்தகைய ஞானிகளை இன்பத்துன்பங்கள் பற்றமாட்டா. பிராரத்த வினை உடலூழாய்க் கழியும் என்பர்.

அத்தகைய ஞானிகளின் செயல்கள் எல்லாம் இறைவன் செயலே. அவர்களுக்குச் செய்தது எதுவும் சிவ பெருமானுக்கே செய்தது ஆகும். இவ்வாறு சிவபெருமானே அவர்களோடு இயைந்து நின்று ஏன்று கொள்வதால் அந்த ஞானியருக்கு நாம் செய்யும் பூசனையும் வணக்கமும் இறைவனுக்கே உரியனவாகும் என்பது விடையாகும்.

17 சொல் தொமும்பு கொள்ள நீ சூழ்ந்ததுவும் நின்செயல்கள்
மற்றவர்கள் நின் நோக்கில் மாய்ந்த உயிர்க் குற்றம்
ஒளித்தி யாங்கு ஐய! உயர் வெண்ணெய் நல்லூர்க்
குளித்தமதுக் கொன்றை எம்கோ!

உயர்வு மிக்க திருவெண்ணெய் நல்லூரில் தேன் பிலிற்றும் கொன்றை மாலையை அணிந்து எழுந்தருளியுள்ள மெய்கண்ட தேவரே எல்லா உயிர்களும் தங்களுக்கு அடிமையாக விளங்குவனவே. ஆயினும் தாங்கள்தங்கள் திருவடியை தங்களுக்கே உவந்து அடிமை செய்யும் சிலருக்கே வழங்குகின்றீர். அவ்வாறு தங்கள் திருவருள் பெற்ற உயிர்கள் தம்முனைப்புக் கெட்டுத் தமக்கென ஒரு செயலின்றி ஒழுகுவதையும் காண்கிறோம். மற்றவர்களுக்கோ தாங்கள் அகப்படாது ஒளித்துக் கொள்ளுகிறீர். இவ்வாறு சிலருக்கு மறைந்து நின்றும் சிலருக்கு வெளிப்பட்டு அருள் செய்தும் வருவதற்கான தகைமையை எனக்கு உணர்த்தியருள்வீராக.

உலகத்துப் பொருள்கள் யாவும் சிவபெருமானுக்கு உடைமை. உலகத்தின் உயிர்கள் யாவும் சிவபெருமானுக்கே அடிமைகள் ஆயினும் சிவபெருமானை வழிபட்டு அன்பின் முதிர்ச்சியினாலே, சிவன் செயலன்றி வேறு செயல் இல்லை என உணர்த்தல் அரிதே. தன் முனைப்பை  இழந்தவர்களுக்குத் தயிரின் நெய் போல எளிதில் வெளிப்பட்டுத் தோன்றுவான்,. அவ்வாறு எல்லாம் அறத் தன்னை இழக்காத ஆன்மாக்கள் கட்டு நிலையிலேயே இருப்பன. ஆதலால் அவர்களுக்குப் பாலில் கலந்த நெய் போல வெளிப்படாமல் நின்று அவர்களைச் செயல் படுத்துவான்.

முதல் வகையினருக்குத் தயிரின் நெய் போல இறைவன் விளங்குவான் என்பதைச் சிவஞான போதம் பன்னிரண்டாம் சூத்திரத்தில் எடுத்துக்காட்டுச் செய்யுளில்,

நேசத்தர் தம்பால் நிகழும் ததி நெய் போல்
பாசத்தார்க்கு இன்றாம்பதி

என்று கூறப்படுவதிலிருந்து அறியலாம், இரண்டாம் வகையினர்க்குப் பாலில் நெய் போல் இறைவன். மறைந்திருப்பான்  என்பதைத் திருநாவுக்கரசர் தேவாரத்தில்  விறகில் தீயினன் பாலில் படுநெய் போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்  என்று அருளிச் செய்த திருவாக்கால் அறியலாம்.

18 கோலம் கொண்ட ஆறுஉண ராதே
ஞாலம் காவலன் யான் எனக் கொளீஇப்
பொய்யை மெய்யெனப் புகன்று வையத்து
ஓடாப் பூட்கை நாடி நாடா
என்னுள் கரந்து என் பின்வந்து அருளி

என்னையும் தன்னையும் அறிவின்று இயற்றி
என்னது யான் எனும் அகந்தையும் கண்டு
யாவயின் யாவையும் யாங்கணும் சென்று
புக்குழிப் புக்குப் பெயர்த்துழிப் பெயர்ந்து
மிக்க போகம் விதியால் விளைத்திட்டு

என்பணி ஆளாய் எனைப்பிரி யாதே
ஓடி மீள்குஎன ஆடல் பார்த்திட்டு
என் வழி நின்றனன் எந்தை அன்னோ
அருள் மிக உடைமையில் அருள்துறை வந்து
பொருள்மிக அருள்தலும் பொய்ப்பகை ஆதலும்

கைகண்டு கொள்ளெனக் கடல்உலகு அறிய
மெய்கண்ட தேவன் எனப்பெயர் விரீ இத்
தன்னுள் கரந்து தான்முன் ஆகித்
தன்னதும் தானுமாய் என்னை இன்றாக்கித்
தன்னையும் என்னையும் தந்து தனது

செய்யா மையும் என்செயல் இன்மையும்
எம்மான் காட்டி எய்தல்
அம்மா எனக்கே அதிசயம்தருமே.

பெருமானே நான் எடுத்துள்ள இந்தப் பிறவி துன்பத்திற்கே குடியிருப்பாக அமைந்த உடலோடும் கூடியது. ஆயினும் இதனை உள்ளவாறு உணராத நான் இந்த உலகத்துக்கே தலைவன் என்று எண்ணித் தருக்கித் திரிகிறேன். பொய்யான உடலையும் உலகத்துப் பொருள்களையும் மெய் என்று நினைந்து உலக இன்பத்தில் உழல் கின்றேன். என்னை இயக்கும் தலைவன் ஒருவன் உளன் என்று உணராது அலைகின்றேன்.

இவ்இயல்பு உள்ள எனக்குள்ளே தாங்கள் புகுந்து மறைந்து நிற்கின்றீர். என் செயல்களுக்கு எல்லாம் துணை நின்று என்னை விட்டுப் பிரியாமல் உடனாக நிற்கின்றீர். என்னையும் உணராமல் எனக்கு ஒப்பற்ற தலைவனாகிய தங்களையும் உணராமல் யான் என்னும் அகப்பற்றும் என்னுடையது என்னும் புறப்பற்றும் கொண்டு நான் செருக்கித் திரிகின்றேன் இதனால் எனக்கு உயர் திணை, அஃறிணை முதலிய பல்வேறு பிறவிகளும் பல்வேறு உலகங்களிலே எல்லையற்று வாய்க்கின்றன.

இவ்வாறு நான் புகுகின்ற இடத்து என்னுடன் புகுந்தும் பெயர்கின்ற இடத்து என்னுடன் பெயர்ந்தும் என் வினைக்கேற்ற நுகர்ச்சிகளை உரிய முறையில் எனக்கு ஊட்டி வருகிறீர், இதனைக் காணும் போது தங்கள் முதன்மையை விட்டுக் கொடுத்து என் பணியாளனைப் போல் என்னைப் பிரியாதிருந்தும், விரும்பிய வழியெல்லாம் ஓடித் திரும்புக  என்று என்னுடைய ஆடலுக்கெல்லாம் ஒத்து இருந்து என் வழியிலேயே நின்ற தலைவராகத் தாங்கள் திகழ்கின்றீர்.

என்பால் கொண்ட பேரன்பினால் திருவெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் திருமேனி கொண்டு மெய்கண்ட தேவன் என்னும் திருப்பெயர் தாங்கி, உண்மைப் பொருளாகிய சிவானந்தப் பெரும் பொருளை  எனக்கு வழங்கி அருளினீர். அதன் பயனாக நான் பற்றிக்கிடந்த உலகியல் பொருள்கள் யாவும் பொய் எனக்காட்டி அவை எனக்குப் பகையாகுமாறும் எனக்கு உணர்த்தி அவற்றை நானே கண்டுப்பிடிக்குமாறு உணர்த்தியருளினீர்.

தங்களது பேரறிவினுள்ளே என்னுடைய சிற்றறிவினை அடக்கிக் கொண்டு தங்கள் செயலே, மேலிடும் வண்ணம் என்னை ஆட்கொண்டு அருளினீர். தங்களுடைய அருளும் தாங்களுமாய் என்னுடைய தற்போதத்தை இல்லாததாக்கித் தங்களது தனித் தன்மையும் கெடாமல்  நான் என ஒரு பொருள் உண்டு என்னும் நிலைமையும் கெடாமல் எனக்கு அறிவுறுத்தி அருளினீர். அவ்வாறே தாங்கள் எதனையும் சுட்டியறியாமல் எல்லாவற்றையும் இயக்கி நின்று அதனால் விகாரப்படாது விளங்குகின்ற முறைமையினையும், எனக்கென்று ஒரு செயல் இன்மை யினையும் நான் உணருமாறு செய்தருளினீர். கட்டு நிலையில் ஒளித்து நின்றும், வீட்டு நிலையில் வெளிப்பட்டுத் தோன்றியும் தாங்கள் செய்கின்ற உதவிகளை உணரும் போது எனக்கு எல்லையற்ற வியப்புத் தோன்றுகிறது.

இதுவரை வினாக்கள் எழுப்பி விடைகளை உய்த்து உணர வைத்துத் தம் நூலை அமைத்துக் கொண்ட ஆசிரியர் அருள் நந்தி சிவம், இந்தப் பாடலிலும் இதன் பின் வரும் பாடலிலும் சிவபெருமான் தனது பெருங்கருணையினால் உயிருக்குச் செய்துவரும் உதவிகளை விதந்து பாராட்டுகிறார்.

19 தருமா தருமத் தலைநின்று ஆழ்வேனைக்
கருமா கடல் விடம் உண் கண்டப் பெருமான்
திருவெண்ணெய் நல்லூர்ச் சுவேத வனத்தான்
உரு என்ன வந்து எடுத்தான் உற்று.

பெருங்கடலிலே தோன்றிய கரிய நிறம் கொண்ட நஞ்சினைத் தன்னுடைய கழுத்திலே நிறுத்திக் கொண்ட சிவபெருமான் திருவெண்ணெய் நல்லூரிலே தோன்றியருளிச் சுவேதவனப் பெருமான் என்னும் பிள்ளைத் திருநாமம் தாங்கி என்னைப் போன்ற உருவத்தைக் கைக்கொண்டு அறம் மறம் என்னும் இரு வினைகளையும் செய்து பிறவிக் கடலிலே விழுந்து அழுந்துகின்ற என்னைத் தனது பேரருளால் எடுத்து ஆட்கொண்டு அருளினான்.

தீவினையைப் போலவே நல்வினையும் பிறப்புட்படுவத்துவதால் தரும அதருமத் தலை நின்று ஆழ்வேன் என்று இரு வினைகளையும் ஒருங்கு கூறினார். எடுத்து என்பதன் மூலமாகப் பிறவிக் கடலில் இருந்து மீட்டுத் தூக்கி முத்திக் கரை சேர்த்ததை ஒரே சொல்லால் உணர்த்தினார் சிவஞான சித்தியாரில் பரபக்கத்துள் இவ் ஆசிரியர் என்னை இப்பவத்தில் சேரா வகை எடுத்து, என் சித்தத்தே, தன்னை வைத்து அருளினாலே தாளிணை தலைமேல் சூட்டும் மின்னமர் பொழில் சூழ் வெண்ணை மேவி வாழ் மெய் கண்டான் என்று அருளியதும் இக் கருத்தே பற்றி என்க.

20. உற்றவர் பெற்றவர் அற்றவர் முற்றும்
அற்றவர்க்கு அற்றவன் அல்லவர்க்கு அல்லவன்
அந்தம் ஆதி இல்லவன் வத்து
குரக்கு மனத்துக் கொடியேன் பரக்கும்
பரப்பைக் குவித்து நிறுத்திப் பிடித்திட்டு

இருள் வெளி ஆகும் மருளினை அறுத்து
வந்து புகுதலும் சென்று நீங்கலும்
இன்றி ஒன்றாய் நின்ற அந் நிலையில்
ஒன்று ஆகாமல் இரண்டா காமல்
ஒன்றும் இரண்டும் இன்றா காமல்

தன்னது பெருமை தாக்கான் ஆயினும்
என்னது பெருமை எல்லாம் எய்தித்
தன்னை எனக்குத் தருவதை அன்றியும்
என்னையும் எனக்கே தந்து தன்னது
பேர் ஆனந்தப் பெரும் கடல் அதனுள்

ஆரா இன்பம் அளித்துத் தீரா
உள்ளும் புறம்பும் ஒழிவுஇன்றி நின்ற
வள்ளன்மை காட்டி மலர் அடி அருளிய
மன்னன் எங்கோன் வார்புனல் பெண்ணை
வெண்ணெய் காவலன் மெய் கண்ட தேவன்.

அண்ணல் அருள் ஆலயத்தன் நண்ணிய
மலம்முத லாயின மாய்க்கும்
உலக உயிர்க்கு எல்லாம் ஒரு கண்ணே.

உற்றார், பெற்றவர், உறவினர் போன்ற தொடர்புகள் யாவற்றையும் விட்டு நீங்கியவர்க்கு அவர்களோடு வேற்றுமை இன்றிக் கலந்து நிற்பவன். அவ்வாறு நீங்காதவர்களுக்கு வேற்றுமை இன்றிக் கலந்து நிற்பவன். அவ்வாறு நீங்காதவர்க்கு எட்டாதவனுய்த் தனித்து நிற்பவன். தனக்கு ஈறும் தோற்றமும் இல்லாதவன். இத்தகைய தன்மைகளை உடைய இறைவன் குரு வடிவம் தாங்கி எழுந்தருளி, ஒன்றைவிட்டு ஒன்று பற்றும் குரங்கினைப் போல அலைகின்ற மனத்தை உடைய என்னைப் பரபரத்துக் திரிய விடாமல் ஒரு முகமாக்கித் தனது திருவடியில் திளைக்குமாறு அருளினான். உலகியற் பொருள்களில் என் மனம் ஈடுபடாமல், இருள் நிலையையும் மருள் நிலையையும் அறுத்துத் தீர்த்தான்.

தோற்றமில் காலம் தொட்டே அவன் என்னோடு உடனாக நிற்கிறான் ஆதலால் அவன் வந்து என் உள்ளத்தில் புகவும் இல்லை. நான் சென்று அவனிடத்தில் கலத்தலும் இல்லை . இந்த நிலையில் அவன் என்னோடு கலந்து நிற்பதனால் என்னுடன் அவன் ஒன்றாகி விடவும் இல்லை, அல்லது என்னை விட்டுப் பிரிந்து இரண்டாகி விடவும் இல்லை ஒன்றும் இரண்டும் இல்லாத  நிலையும் எய்திவிடவில்லை. தங்களுக்கு உண்டான முற்றுணர்வும் ஐந்தொழிழும் எனக்கு இல்லையேனும். எனது அறிவு விழைவு செயல்களைத் தம் திருவருள் வெளிக்குள் அடிக்கித் தமது பேரின்பப் பெரு வாழ்வை எனக்கு வழங்கி அதனால் எழுகின்ற உவட்டாத இன் பத்தை எனக்குத் தந்து ஒரு காலத்திலும் என்னை விட்டு நீங்காத அகமும் புறமும் நிறைந்த அறிவைத் தமது வள்ளன்மையால் வழங்கினார்.

வெள்ளம் பெருகும் பெண்ணை யாற்றங் கரையில் உள்ள திரு வெண்ணெய் நல்லூரில்  எழுந்தருளி இருந்து  மெய்கண்ட தேவன் என்ற திருப்பெயர் தாங்கி எங்கள் அரசனாகவும் தலைவனாகவும் அருட்டுறையிலே வீற்றிருந்து உயிரின் பாசப் பிணிப்பை மாய்க்கும் கண் போன்றவரே உம்மை போற்றுகிறேன்.

இந்தப் பாடலில் அத்துவிதத்தைப் பற்றிய சைவ சித்தாந்தத்தின்  கொள்கை இரண்டு வரிகளில் நூற்பா வடிவில் தரப்பட்டுள்ளது. ஒன்றா காமல் இரண்டாகாமல் ஒன்றும் இரண்டும் இன்று ஆகாமல் என்பன அந்த வரிகள். இறை உயிர் தனை என்ற முப்பொருள்களும் என்றென்றும் உள்ள பொருள்களே. ஆயினும் தளைகள் இறைவனை அறியும் அறிவற்றவை. இறைவனுக்கு உலகியல் பொருள்களால் ஆவது ஒன்று மில்லை. இயல்பாகவே பாசங்களில் நீங்கிய இறைவனைத் தளைகள் பற்றமாட்டா. உயிர்களே  அன்னியம் இம்மையின் அரன் கழல் சென்றுஅடையும் தகுதி உடையன. வீட்டு நிலையில் இறைவனும் உயிர்களும் கொண்டிருக்கும் தொடர்பு அத்துவிதம் என்ற சொல்லால் குறிக்கப் படும். அத்துவித நிலையைச் சைவ சித்தாந்த நோக்கில் எடுத்துரைப்பன இவ் இரண்டு வரிகள்.

முத்தி நிலையில் உயிர் தன் தனித் தன்மையை இழந்து இறைவனோடு கலந்து விடும் என்பது அபேத வாதம் எனப்படும் ஒன்றாகாமல் என்ற சொற்கள் அபேதக் கொள்கையை மறுப்பன. வீட்டு நிலையிலும் உயிர்கள் தனித்தே நிற்கும் இறைவனும் தனித்தே நிற்பான்  ஏனெனில் இறைவனும் உயிர்களும் முறையே ஒளியும் இருளும் போல என்பது பேத வாதம் என்ற கொள்கை இந்தக் கொள்கையை மறுப்பது இரண்டாகாமல் என்ற சொற்கள்.

ஒன்றும் இரண்டும் இன்றாகாமல் என்ற சொற்கள் சைவ சித்தாந்தத்திற்கு மாறுபட்டு மற்றைச் சமயத்தவர் கூறும் பல்வேறு பட்ட கொள்கைகளையும் மறுக்கின்ற பகுதியாகும். இக்கொள்கைகளின் படி இறைவனும் உயிரும் ஆகிய இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ இல்லாமல் போகும் என்பதை மறுத்து ஒன்றும் இன்றாகாமல், இரண்டும் இன்றாகாமல் என்று பொருள் கொள்ளுமாறு ஆசிரியர் அருள் நந்தி சிவம் மிகச் சுருக்கமாக விளங்க வைத்தார். இதனால் உயிரும் இறைவனும் முத்திநிலையில் தனித்த பொருள்களாகவே இருப்பினும் வேறுபட்டு நில்லாமல் ஒன்றாகவே நிற்கும் என்பதனை வலியுறுத்தினார். உயிர் இறைவன் திருவடிக் கீழ் அடங்கிச் சிவானந்த ஞான வடிவாகி என்றும் மாறாத பேரின்பத்தை நுகர்ந்து கொண்டிருக்கும் என்பது சைவ சித்தாந்தம் எடுத்துரைக்கும் முத்தி நிலையாகும்.

நன்றி: சி.சு.மணி

 
மேலும் இருபா இருபஃது »
மெய்கண்ட சாத்திரங்கள் பதினான்கனுள் ஐந்தாவதாக வைத்துப் போற்றப்படுவது இருபா இருபஃது என்னும் இந்நூல். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar