பதிவு செய்த நாள்
28
ஜூன்
2013
10:06
நகரி: காளஹஸ்தி கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம், 72.43 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக, கோவில் நிர்வாக அதிகாரி ஸ்ரீராமசந்திர மூர்த்தி தெரிவித்தார். சித்தூர் மாவட்டம், காளஹஸ்தி ஞானபிரசூனாம்பிகை உடனுறை வாயு லிங்கேஸ்வர சுவாமி கோவிலில் தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு, ராகு, கேது சர்வதோஷ நிவாரண பரிகார பூஜைகளில், தினமும், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, பரிகார பூஜை செய்கின்றனர். காளஹஸ்தி கோவில் உண்டியல் காணிக்கை மாதத்திற்கு ஒருமுறை எண்ணப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணம், தங்கம், வெள்ளி எண்ணி கணக்கிடப்பட்டது. இதில், 72,43,197 ரூபாயும், 117 கிராம் தங்கமும், 430 கிலோ வெள்ளியும், 299 வெளிநாட்டு கரன்சிகளும் வசூலானதாக நிர்வாக அதிகாரி தெரிவித்தார். காணிப்பாக்கம்: இதேபோல் காணிப்பாக்கம் கிராமத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலிலும், உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம், 92.52 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில், பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணம், தங்கம், வெள்ளி எண்ணி கணக்கிடப்பட்டது. இதில், 92,52,367 ரூபாயும், 66 கிராம் தங்கமும், 2 கிலோ வெள்ளியும் வசூலானதாக, கோவில் நிர்வாக அதிகாரி பூர்ணசந்திரராவ் தெரிவித்தார்.