பதிவு செய்த நாள்
29
ஜூன்
2013
10:06
திருப்பதி: உத்தரகண்ட் வெள்ள பாதிப்பின் எதிரொலியாக, ஆந்திர மாநில அரசு, மலைப் பகுதிகளில் உள்ள கோவில்கள், சுற்றுலாத் தலங்களை ஆய்வு நடத்த, ஒரு குழுவை அமைக்க உள்ளது. இக்குழு, திருப்பதி மலைப் பகுதிகளை விரைவில் ஆய்வு செய்ய உள்ளது. திருமலை பகுதியில், நிலத்தின் எடை தாங்கும் திறன் குறைவாக இருப்பதால், அங்கு புதிய கட்டடங்கள் கட்டுவதை நிறுத்த வேண்டும் என, அகழ்வராய்ச்சி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பதி அலிபிரி வழியாக, திருமலைக்கு செல்லும், இரண்டாவது மலைப்பாதையில், மண்ணின் அடர்த்தி குறைவாக இருப்பதால், அப்பாதையில், மழைக் காலங்களில் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர் குழுவினர், தேவஸ்தானத்திடம் கூறியுள்ளனர். இதையடுத்து, சென்னை, ஐ.ஐ.டி., நிபுணர் குழு வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தியதில், மலைப் பாதைகளில் மண் சரிவை தடுக்க, சிமென்ட் உதவியுடன், "பேக் செய்வதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடியாது என்பது தெரியவந்தது. திருமலையில், பல நீர் தேக்கங்கள் உள்ளன. திருப்பதியிலும் பல நீர்த் தேக்கங்கள் உள்ளன. கனமழை காலத்தில், இவை நிரம்பினால், திருமலைக்கு மட்டுமல்லாமல், திருப்பதிக்கும் வெள்ள அபாயம் உள்ளது என, சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறியுள்ளனர். திருமலையில், தேசிய பேரிடர் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு அலுவலகம் இல்லை. அதை ஏற்பாடு செய்ய தேவஸ்தானமும் முன்வரவில்லை. ஆனால், சென்ற ஆண்டு இந்த குழுவின் பயிற்சியாளர்கள், ஆபத்து காலங்களிலும், தீவிபத்து ஏற்படும் சமயங்களிலும், எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த, பயிற்சி முகாம் நடத்தினர். இந்நிலையில், உத்தரகண்ட் சம்பவத்துக்கு பின், அரசு சார்பில் ஆய்வு குழு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதே சமயத்தில் சில ஊழியர்களை தேசிய பேரிடர் பாதுகாப்பு, மீட்பு குழுவின் பயிற்சிக்கு அனுப்ப உள்ளது. பிரம்மோற்சவம் துவங்கும் முன், இவர்கள், பயிற்சி முடித்து திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.